குஜராத் மாநிலம், உனா பகுதியில் பசு பாதுகாவலர்களால் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளான தலித் குடும்பத்தினர் உள்பட 450 பேர் புத்த மதத்தை ஞாயிற்றுக்கிழமை தழுவினர். மதரீதியாகவும், ஜாதிரீதியாகவும் தாங்கள் பாகுபடுத்தப்படுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.குஜராத்தின் உனா பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறந்த பசுவின் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பசு பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் கட்டி வைத்து கடுமையாக அடித்தனர். மேலும், இந்த கொடூரத் தாக்குதலை விடியோவில் பதிவு செய்தும் வெளியிட்டனர். இந்த விவகாரம் அப்போது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர்கள் நால்வரும் தங்கள் சுற்றத்துடன் புத்த மதத்தை தழுவ முடிவு செய்தனர். இதற்காக குஜராத்தின் மோட்டா சமதியாலா கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அவர்கள் உள்பட மொத்தம் 450 தலித்துகள் மதம் மாறினர். இது தொடர்பாக தாக்குதலுக்குள்ளான இளைஞர்களில் ஒருவர் கூறியதாவது:
எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, உரிய வேலை தருவதாகவும், விவசாயம் செய்வதற்கு சிறிதளவு நிலம் தருவதாகவும் குஜராத் மாநில அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது வரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
மேலும், எங்களை முஸ்லிம் என்று சமூகத்தில் சிலர் சித்திரிக்கின்றனர். அதைத் தாண்டி ஜாதி ரீதியாகவும் பாகுபாடு காட்டுகின்றனர். இதன் காரணமாகவே, புத்த மதத்தைத் தழுவ முடிவு செய்தோம் என்றார் அவர்.
