
நடப்பாண்டில் கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்தார்.மத்திய பாஜக ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் "ஜன் ஆக்ரோஷ்' என்ற பெயரில் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ், நாங்குனேரி தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.,எஸ்.டி, பிரிவு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து சு.திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது மக்கள் மத்தியில் உள்ள ஏமாற்றத்தையும், கோபத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் சார்பில் 2000 தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ராகுல் காந்தியின் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அவர் தெரிவித்ததைப் போல பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும். ராகுல் காந்தி நிச்சயம் பிரதமராவார் என்றார் அவர். நாங்குனேரித் தொகுதி எம்எல்ஏ எச்.வசந்தகுமார் கூறுகையில், "மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமானோர் உணர்வு பூர்வமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்' என்றார்.
குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் கூறுகையில், "ஜாதி, மத, இன உணர்வுகளைத் தூண்டி மிக மோசமான முறையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜக ஆட்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக மீது மக்களுக்குள்ள வெறுப்பையே இந்தக் கூட்டம் பிரதிபலிக்கிறது' என்றார்.