சென்னை கே.கே.நகரில் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்திக்கொண்டிருந்த காவல் துணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலி நிருபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்துவந்த மாணவி அஸ்வினியை அழகேசன்(28) என்ற இளைஞர் நேற்று (மார்ச் 9) மதியம் 2.30 மணி அளவில் கத்தியால் குத்திக் கொலை செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்து அவரின் கைகளைக் கட்டி சாலையில் அமரவைத்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்கள் தரப்பிலிருந்து ஒருவர், ’எவ்வாறு இதுபோன்ற சம்பவம் நடக்கலாம்; பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது; போலீஸ் என்ன செய்கிறது’ எனத் துணை ஆணையர் அரவிந்தனிடம் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்களுக்கு மத்தியில் அந்த நபர் இருந்ததால், துணை ஆணையருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இதனால் அந்த நபரையும் செய்தியாளர் என நினைத்து துணை ஆணையர் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால் அந்த நபரின் நடத்தையைப் பார்த்து சந்தேகமடைந்த மற்ற செய்தியாளர்கள் அவரை விசாரித்துள்ளனர். அப்போது அவர் ஏதோ ஒரு பத்திரிகை பெயரைக் கூறியுள்ளார். அதுபோன்று ஒரு பத்திரிகையே வரவில்லை எனச் செய்தியாளர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, போலீஸார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் ஜோஷி என்பதும், போலி நிருபர் எனக் கூறி பலரை ஏமாற்றியதும் தெரியவந்தது. பின்னர் அவரைக் கைது செய்த போலீஸார் கே.கே .நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட ஜோஷி, “நான் நிருபர் எனக் கூறி பல பத்திரிகையாளர் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளேன். மாணவி கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது பத்திரிகையாளர் என அடையாள அட்டையைக் காண்பித்தேன். ஆனால் அப்போது மாட்டிக்கொண்டேன். போலீஸார் என்னைக் கைது செய்துள்ளனர். இனிமேல் இதுபோன்ற தவறைச் செய்யமாட்டேன். பத்திரிகை நிருபர்களுக்கு இனி இடையூறு செய்யமாட்டேன். பத்திரிகையாளர்கள் என்னை மன்னித்துவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரிடமிருந்து கலக்கல், தீக்குச்சி, சமூக செய்தி, முரசு போன்ற போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த பிப்ரவரி மாதம், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அரசு வேலை வாங்கித் தருவதாக, பலரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக ஸ்ரீகுமார்(42) என்னும் போலி நிருபரை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Minnambalam.com
Post a Comment
0Comments