டெல்லியில் நேற்று (மார்ச் 9) நடந்த நான்கு மாநில அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து, இன்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் தெரிவித்தனர் தமிழக அதிகாரிகள்.
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பாக, நான்கு மாநில அதிகாரிகள் கூட்டம் நேற்று (மார்ச் 9) டெல்லியில் நடைபெற்றது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச்செயலாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறைச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறைச் செயலாளர் பிரபாகரன், காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இன்று தமிழகம் திரும்பிய அதிகாரிகள், தலைமைச்செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனர். அப்போது, நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த வாதம் குறித்து அவர்கள் விளக்கம் அளித்தனர். அதன்பிறகு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
இந்த கூட்டத்தின் முடிவில், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பேசிய தகவல்களைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென கூறியிருந்தார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்களும் இதனை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0Comments