ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒருவருடம் ஆகியும் இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ‘’ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள்’’ என்று தீர்ப்பளித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட 128 சொத்துக்களில், 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
பின் குன்ஹாவின் தீர்ப்பு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியால் ரத்து செய்யப்பட, ஆனால் கர்நாடக அரசின் மேல் முறையீட்டின் பேரில் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பையே உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோரது தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், மேலும் தனது தீர்ப்பில் வழக்கின் விசாரணை அமைப்பானது சம்பந்தப்பட்ட சொத்துகளின் நிலைமையை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விசாரணை அமைப்பு என்றால் அது, தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்ககம்தான். (விஜிலென்ஸ்) அதாவது பறிமுதல் செய்யப்பட வேண்டிய சொத்துகள் யாருக்கும் கை மாற்றப்படாமல் அரசின் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதை தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்ககம் கண்காணிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்தியில்,
’’உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி செயல்பட வேண்டிய கட்டாயம் தமிழக விஜிலென்ஸ் துறைக்கு ஏற்பட்டுள்ளது. விஜிலென்ஸ் இயக்குநராக இருந்த வெங்கட்ராமன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டியிருப்பது பற்றி தமிழக அரசுக்கு வலியுறுத்தினார். ஜெயலலிதாவின் சொத்துக்களை பொசிஷன் எடுக்குமாறு சில கலெக்டர்களுக்கு கடிதமும் எழுதினார். ஆனால், அதன்பின் அவர் நீண்ட விடுமுறையில் போய்விட்டார். இதன் பின் அந்த பொறுப்புக்கு மஞ்சுநாத் வந்தார்’’ என்று குறிப்பிட்டிருந்தோம்.
இதையடுத்து 2017 மார்ச் மாதம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக விஜிலென்ஸ் இயக்ககத்தில் இருந்து ஒரு உத்தரவு போயிருக்கிறது. ‘’சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது பெயர்களில் ஆறு நிறுவனங்களுடையதாக காட்டப்பட்டிருக்கும் 68 சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்பதுதான் அந்த உத்தரவு. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் இந்த சொத்துக்களை இடம் கண்டு, அந்த இடங்களில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சொத்துகள் தமிழக அரசுக்குச் சொந்தமானது என்று அறிவிக்கப்படுகிறது‘ என வருவாய் துறை அதிகாரிகள் மூலம் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், இதோ ஒரு வருடம் ஆகியும் அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் பரவியுள்ள 68 அசையா சொத்துகளை கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரியவருகிறது. போயஸ்கார்டனை அரசு இல்லமாக்கும் அறிவிப்பு என்று கடந்த ஆகஸ்டு மாதம் அறிவிப்பு வந்தபோதும் அதன் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஒரு வருடம் ஆகியும் தமிழக அரசால் நடைமுறைப் படுத்தாமல் இருப்பதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு சிலர் கொண்டு செல்லத் தயாராகி வருகிறார்கள்.
ஒரு வருடம் ஆகியும் அமலுக்கு வராத உச்ச நீதிமன்றத் தீர்ப்பு!
3/10/2018 03:16:00 PM
0
Tags