வாக்காளர் பட்டியலில், உங்கள் பெயர், முகவரி சரியாக இருக்கிறதா என்பதை, இன்று முதல், நீங்களே சரி பார்க்கலாம். இதற்காகவே, வாக்காளர் சுயவிபர சரிபார்ப்பு திட்டம், நாடுமுழுவதும், இன்று துவக்கப்படுகிறது. பெயரை சேர்க்கவும், திருத்தம் செய்யவும், பிரத்யேக இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம், தேர்தல் கமிஷன் சார்பில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும். அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படும்.
அவை சரியாக பரிசீலிக்கப்படுவது இல்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்தது.இதை தவிர்க்க, இம் முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்வதற்கு முன், ஒவ்வொரு வாக்காளரும், தாங்களாகவே, பட்டியலில் பெயரை சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும், தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்துள்ளது.
இதற்காக, வாக்காளர் சுய விபர சரிபார்ப்பு திட்டம், நாடு முழுவதும், இன்று துவக்கப்படுகிறது. இன்று முதல், செப்., 30 வரை, இத்திட்டம் அமலில் இருக்கும். இம்மாதம் முழுவதும், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், தாங்களே அப்பணியை மேற்கொள்ளலாம்.மாற்றுத் திறனாளிகள், இலவச டெலிபோன் எண், '1950'ல் தொடர்பு கொண்டு, திருத்தங்கள் செய்யலாம்.மற்றவர்கள்,
'voter help line'
என்ற, 'மொபைல் ஆப்' மற்றும்,
'www.nvsp.in'
என்ற, இணையதளம் வழியே, மாற்றங்கள் செய்யலாம். கணினி மற்றும் மொபைல் போன் இல்லாதவர்கள், பொது சேவை மையம் மற்றும் வாக்காளர் சேவை மையங்களுக்கு சென்று, மாற்றங்கள் செய்யலாம்.
தமிழகத்தில், 8,095 பொது சேவை மையங்கள்; 1,662 இ - சேவை மையங்கள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 97 மையங்களில், இந்த சேவை அளிக்கப்படும்.பொது மக்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதன்பின், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக வந்து, வாக்காளர் விபரங்களை சரிபார்ப்பர். அப்போது, அவர்களிடம், 'பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு' மற்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள ஆவணங்களில்,ஏதேனும் ஒன்றை காட்டினால் போதும். தவறே இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்காக, நாடு முழுவதும் வாக்காளர் சுய விபர சரிபார்ப்பு திட்டம் துவக்கப்படுகிறது. இது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அக்., 15ல் வரைவு பட்டியல்
நவம்பரில் சிறப்பு முகாம்'சென்னையில், அக்டோபர், 15க்குள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:வாக்காளர்கள், தங்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விபரங்களில், திருத்தங்கள் மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விபரங்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக, கள ஆய்வு செய்யப்பட்டு, அக்., 15க்குள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.மேலும், நவ., 2, 3, 9, 10ம் தேதிகளில்,அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள் வாயி லாகவும், வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.