
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை குறைத்து கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
அத்துடன், நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த 3 மாத காலஅவகாசமும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மனு செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3–ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9–ந் தேதி உத்தரவிட்டது.
இப்போது காவிரி விவகாரத்தில் கால அவகாசம் போதவில்லை மேலும் 2 வாரம் கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது.
காங்கிரஸ், பாரதீய ஜனதா நாடகம்
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ், பா.ஜனதா காவிரி நாடகத்தை நடத்துவது ஏன்? என கேள்வியை எழுப்பி உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா நாடகம் நடத்துகிறது. இப்போது காவிரி நாடகத்தை நடத்துவது ஏன்? மத்திய அரசுகளின் திறமையற்ற செயல்பாடு காரணமாகவே தண்ணீருக்கான போர் நேரிட்டு உள்ளது. அனைத்து விவசாயிகள் மற்றும் ஏக்கருக்கும் தண்ணீர் என்பதே புதிய அணியின் கொள்கை முழக்கமாகும் என கே.சி. சந்திரசேகர ராவ் பேசிஉள்ளார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.
புதியதாக கூட்டணி அணி அமைக்கப்படும் என காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவிற்கு எச்சரிக்கையை விடுக்கிறேன். இதற்கான பணியை தொடங்கிவிட்டேன். 29-ம் தேதி திமுக மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறேன். வரும் காலங்களில் இத்தேசம் புதிய ஆட்சியை பார்க்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.