
காஷ்மீரின் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி 10-ந்தேதி கடத்தி செல்லப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு வாரத்துக்குப்பின் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கதுவா மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ஒரு இளம் குற்றவாளி உள்பட 8 பேர் மீது கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதைப்போல இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குற்றவாளிகள் இருவர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இதில் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடக்கிறது. எனவே அதுவரை சிறுமி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கை விசாரிக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.