Breaking

நிலவேம்புக் கஷாயம் கேட்கும் வெளிநாடுகள்!

நம்நாடு செய்திகள்
0
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளும் நிலவேம்புக் குடிநீரைக் கேட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலுக்குப் பலர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், மக்களும் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. அரசின் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. ஆனால் டெங்கு காய்ச்சல் இல்லாதவர்கள் நிலவேம்புக் குடிநீரை குடித்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற தகவல், சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.
நேற்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், "சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை, மக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை விநியோகிக்க வேண்டாம்" என்று தனது நற்பணி இயக்கத்தினரை கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நிலவேம்புக் குடிநீர் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் இன்று (அக்டோபர் 19) தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆய்வுசெய்த பிறகு, மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "பல மாவட்டங்களில் டெங்குவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பக்கவிளைவு இல்லாத நிலவேம்புக் குடிநீர் குறித்துத் தவறான தகவல் தகவல்களைச் சமூக வலைதளங்களில் கூற வேண்டாம். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகள் நிலவேம்புக் கஷாயத்தைக் கேட்டுள்ளன. இன்னும் 10 அல்லது 15 நாட்களில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். டெங்கு குறித்துப் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தருமபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "பொதுமக்கள் போலி மருத்துவர்களை நம்பிச் செல்ல வேண்டாம். டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிலவேம்பு கஷாயமும் நவீன முறையில் ஆய்வு செய்த பிறகே வழங்கப்படுகிறது. நிலவேம்பு கஷாயம் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவம், அதனால் பக்கவிளைவு ஏற்படாது. உலகின் பல்வேறு நாடுகளில் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)