
நிலவேம்புக் குடிநீர் தொடர்பாகத் தவறான கருத்துகளைப் பரப்புவதாக நடிகர் கமல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இதன் காரணமாக பலியாகியுள்ள நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு சார்பிலும் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், நிலவேம்பு குடிநீர் பருகினால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. நிலவேம்பு நீர் பருகுவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் நீங்காமலேயே உள்ளது.
நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது இந்தக் கருத்து விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், தேவராஜன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றினை இன்று (அக்.19) காலை அளித்திருக்கிறார். அதில் அவர், நிலவேம்புக் குடிநீர் குறித்துத் தவறான தகவலை நடிகர் கமல் பரப்பிவருகிறார். இதன் காரணமாகப் பொதுமக்கள் மத்தியில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகும். எனவே தவறான தகவலைப் பரப்பும் நடிகர் கமலைக் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நிலவேம்புக் குடிநீர் தொடர்பாகக் கமலின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெரியாத விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவு செய்வதே கமலின் வாடிக்கையாக உள்ளது. நிலவேம்புக் குடிநீர் பற்றிய சந்தேகம் தீரச் சித்த மருத்துவர்களையோ, சுகாதாரத் துறை செயலாளர், அல்லது பத்திரிக்கையாளர்களையோ அவர் அணுகியிருக்கலாம். கமல் வாழும் சமூகம் வேறு, நிலவேம்புக் குடிநீர் வழங்கும் சமூகம் வேறு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது நடிப்பு சரியில்லை எனக் கூறி நிபுணர் குழு அமைத்து அறிக்கை வந்த பின் நடிக்க அனுமதிக்கலாம் என்று சொன்னால் அனைவரும் சிரிக்க மாட்டார்களா எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
