Breaking

மாசுகளின் தலை நகரம், அன்புமணி ராமதாஸ்

நம்நாடு செய்திகள்
0
உலகின் மாசு தலைநகராகத் தமிழகம் உருவெடுக்க மத்திய, மாநில அரசுகள் இடமளிக்கக் கூடாது என்று முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 21) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காற்று, நீர் உள்ளிட்ட மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்து லான்செட் மருத்துவ இதழ் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியாகியுள்ள உண்மைகள் அதிர்ச்சியளிக்கின்றன. உலகம் முழுவதும் மாசுகளுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலையில், அவர்களில் 25 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் தமிழகம் முன்னணியில் இருப்பது கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மாசுகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் 27.47% இந்தியாவில் ஏற்படுகிறது என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயமல்ல என்று கூறிய அன்புமணி, மருத்துவ உலகின் பைபிள் எனப் போற்றப்படும் இந்த இதழில் வெளியிடப்படும் தகவல்கள் 100% விழுக்காடு உண்மையானவை; உறுதியானவை என்பதால் இதில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“மாசுக்களால் இதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல் புற்று நோய், ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நெஞ்சக நோய்கள் மற்றும் தோல் நோய்கள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் மாசுக்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான்.
உலகின் மாசு தலைநகராக தமிழகம் உருவெடுக்கவும், அப்பாவி மக்கள் மிக மோசமான நோய்களால் தாக்கப் பட்டு உயிரிழக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் இடமளிக்கக் கூடாது. எனவே அதிக மாசுகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். பெட்ரோலிய மண்டலம் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வலுப்படுத்தப்பட்டு, காற்று, நீர் உள்ளிட்ட அனைத்து மாசுகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்" என்று அன்புமணி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)