சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.இதனை அடுத்து காவல் நிலையத்தை 200-க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம் இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்கிற முருகேசன் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை கருமந்துறைக்கு நண்பருடன் சென்று விட்டு திரும்பி வரும் வழியில் இடையப்பட்டி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை நிறுத்தியுள்ளனர். அப்பொழுது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், முருகேசனை போலீசார் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதில் மயங்கியவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்த பின்னர், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.
இன்று காலை முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முருகேசனை போலீசார் தாக்கும் காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. போலீசார் ரவுண்டு கட்டி தாக்கியதில் உயிரிழந்த மளிகை கடை உரிமையாளர் முருகேசனுக்கு, அன்னக்கிளி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சாத்தான்குளம் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று, சேலம் போலீசாரால் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சற்றுமுன் தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தகவல்கள் பரிமாறப்பட்டு, மேற்கண்ட சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பலியான முருகேஷன் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க ஆவண செய்வதாகவும், அரசு தரப்பில் உறுதியளித்துள்ளனர்...