Breaking

சாட்டை_துரைமுருகன் கைது? சீமான் கண்டனம்!

நம்நாடு செய்திகள்
0

 நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரும் சாட்டை யூட்யூப் தளத்தை நிர்வகித்துவருபவருமான யூ-டியூப் பதிவர் துரைமுருகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


சமர் கார் ஸ்பா என்ற பெயரில் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் வினோத் என்பவர் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி, சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அவரது கடைக்கே சென்று, பிரபாகரன் குறித்த பதிவிற்காக வினோத்தை மன்னிப்பு கேட்க வைத்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

வினோத்தின் கடை மூடப்பட்டுவிட்டதாகவும், அவர் மனநலம் சரியில்லாதவர்கள் என்றும் நாம் தமிழர் கட்சியினர் பலர் தங்களது ட்விட்டரில் பதிவிடத் தொடங்கினர்.

சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவதூறாக பேசிய திருச்சி சமர் கார் ஸ்பா நிறுவனத்தை சார்ந்த வினோத் என்பவர் புரிதல் பிழையால் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்டதை அடுத்து அவருக்கு அறிவுரை கூறி விடை பெற்றோம் என பதிவிட்டு, வினோத் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாம் தமிழர் கட்சியினருக்கும் சாட்டை துரைமுருகனுக்கும் ஒருவரை போலீசார் முன்னிலையிலேயே மிரட்டி வீடியோ எடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது ? தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கையை காவல்துறையும் அரசும்தான் எடுக்க வேண்டும், தண்டனை கொடுக்க இவர்கள் யார் ? என திமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள் சாட்டை முருகனுக்கு எதிராக அடுத்தடுத்து ட்வீட்களை தட்டி சாட்டையை சுழற்றியபடியே இருந்தனர்.

வினோத்தை மிரட்டி, வீடியோ எடுத்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது ஆளுங்கட்சியாக இருந்தும் கூட, நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது என உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரையெல்லாம் டாக் செய்து அவர்கள் பதிவிட்டவண்ணமே இருந்தனர்.

இந்நிலையில் வினோத்தும் திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அதில் தன் கடைக்கு வந்த சாட்டை துரைமுருகன், சரவணன் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளில் தன்னை தொலைபேசி மூலம் அழைத்து திட்டியதாகவும், பின்னர் கடைக்கு சென்றபோது கொலைவெறியுடன் தாக்க முயன்றதாகவும், தான் தப்பிச் செல்லாமல் அங்கிருந்தால் நிச்சயம் அவர்கள் தன்னை கொலை செய்திருப்பார்கள் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி திமுகவினர், தலைமை மீது அதிருப்தி தெரிவித்து போஸ்ட் போட்டுக்கொண்டிருந்த நிலையில், திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் மற்றும் திமுக வழக்கறிஞர் அணியினர், இது குறித்து விசாரிக்கத் தொடங்கி, சாட்டை துரைமுருகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினர்.

அதன்பிறகுதான், சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ், சரவணன் உள்ளிட்ட 4 பேரையும் இரவில் கைது செய்தது திருச்சி கே.கே.நகர் காவல்துறை. இந்த நான்கு பேர் மீதும் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் (143 ,447, 294(b), 506(2), 147 of IPC) வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்..

இந்நிலையில்  இந்தக் கைது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,



தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.


மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன் என்றுள்ளார்.


Post a Comment

0Comments

Post a Comment (0)