தமிழகத்தில் நேற்று 4,343 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 2,027 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.
- 4,343 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 46.6 சதவீதத் தொற்று சென்னையில் (2,027 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 98,392-ல் சென்னையில் மட்டும் 62,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 63.6 சதவீதம் ஆகும். 56,021 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 57 சதவீதமாக உள்ளது.
நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தை நெருங்கும் வகையில் 98 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.
தமிழகம் 98 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் கடந்த நிலையில், இன்று சென்னையும் 62 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3,500 பேர் இதுவரை திரும்பியுள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது.
பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.
நேற்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 75 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,87,725.
சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் உயிரிழப்பு 1321-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,321 பேரில் சென்னையில் மட்டுமே 964 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 72.9 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 62,598-ல் 964 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3 % ஆக உள்ளது.
சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் சென்னையைப் போன்றே Micro Zone கொரொனா ஒழிப்பு திட்டத்தை தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.
அதன் எதிரொலியாக தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, மற்ற மாவட்டங்களில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு தமிழகம் முழுவதிலும் கொரோனா ஒழிப்பு/தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது..
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மருத்துவதுறை, சுகாதாரத்துறை, காவல்துறை,வருவாய்த்துறை, ஊரகத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 12,126 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
வைரஸ் பாதித்தவர்களில் 243 நபர்கள் குணமடைந்துவீடு திரும்பியுள்ளனர். தற்போது 697பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் சிறப்பு அதிகாரி போக்குவரத்துதுறை முதன்மைச் செயலர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ் IAS அவர்கள் கடந்த சில நாட்களாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.கொ.வீரராகவ ராவ் IAS உள்ளிட்ட மாவட்ட அரசு நிர்வாகத்திடம் ஆலோசனைகளை மேற்கொண்டதன் எதிரொலியாக, மாவட்டத்தில் Micro Zone திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த தன்னார்வலர்கள் 2325 பேர் கொரோனா பரவல் தடுப்பு களப்பணியில் உள்ளனர். அவர்கள் மூலம் கொரோனா பரவலைகட்டுப்படுத்த,
100 சதவீதம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் இதுவரை கொரொனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த தீவிர கண்காணிப்பு பணி விரிவு படுத்தப்படவும், கிராமம், ஊராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் இயங்கிவரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், மற்றும் தன்னார்வலர்கள் குழு மூலமும் சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மூலமும் நாள்தோறும் கொரொனா தடுப்பு/ஒழிப்பில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மற்றும் நோய்த் தொற்று ஏற்படாதவாறு கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும், கொரொனா தொற்றைத் தடுக்க முழுமூச்சில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- மேலும் மக்களின் பங்களிப்பு முழுமையாக இருந்தால் மட்டுமே அரசின் கொரொனா தடுப்பு/ஒழிப்பு பணிகள் முழு வெற்றியைத் தரும், தங்களுடைய வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், அடிக்கடி வெதுவெதுப்பான குடிநீர் பருகுவதும், இஞ்சி, மிளகு, எழுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க வைத்து குடுப்பதுடன், நெல்லிக்காய் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களை மக்கள் அதிகம் உட்கொள்வதன் மூலம், மக்கள் கொரொனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்...
- மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரொனா தொற்றை எதிர்கொள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் பரிசோதனை, கொரொனா சிகிச்சைப் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்கள் பிரத்யோகமாக தனிமைப் படுத்தப்படும் கொரொனா சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அரசின் உத்தரவுகளை கடைபிடித்து, கொரொனா தடுப்பு/ஒழிப்பு பணிகளில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் விரைவில் கொரொனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும் எனவும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.