உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 3 மாதத்துக்கு ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து சுழற்சி முறையில் நீதிபதிகள் மாற்றம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் உயர் நீதிமன்ற கிளையில் 3 மாதங்களுக்கு மேலாக நிர்வாக நீதிபதியாக பணிபுரிந்தவர் நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றப்பட்டுள்ளார். இவர் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற கிளையில் ஜூலை 6 முதல் நீதிபதிகள் விசாரிக்க உள்ள வழக்கு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, பொதுநல மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி. கிருஷ்ண வள்ளி அமர்வு ஆள்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்.
நீதிபதி வி.பாரதிதாசன், ஜாமீன், முன்ஜாமீன், டி.கிருஷ்ணகுமார், கல்வி, நிலசீர்திருத்தம் , நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வரி விதிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி, கனிமவளம் தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி பி.புகழேந்தி, சிபிஐ, ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் வழக்கில் அதிரடி:
சாத்தான்குளம் வழக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி நீர்த்துப்போக செய்யப்படும் என பரவலாக பேசப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டதால் கொலை வழக்கு பதிவு, கைது என நீண்டிருக்கிறது.
இந்த வழக்கில் நீதித்துறை நடுவரிடம் துனிச்சலுடன் சாட்சியளித்த தலைமை காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கச் செய்தது, ரேவதியுடன் போனில் பேசி அவருக்கு தைரியம் ஊட்டியது இந்த வழக்கில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதற்கு காரணமான அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவித்து வருகிறது.
இந்நிலையில், வழக்கமான சுழற்சி முறை நடவடிக்கையின் அடிப்படையில் நீதிபதி பி.என்.பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.