Breaking

அதிரடியில் இறங்கிய எடப்பாடியார்! அமைச்சர் நீக்கத்தின் பின்னனி?

நம்நாடு செய்திகள்
0
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஓர் அமைச்சர் முதலமைச்சரால் நீக்கப்பட்டிருக்கிறார்.

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் மணிகண்டன் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அந்தத் துறை கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று (ஆகஸ்டு 7) இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய கைத்தறி விழாவில் கலந்துகொண்ட டாக்டர் மணிகண்டன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேபிள் டிவி பற்றிய கேள்விகள் வந்தன.

ஏனெனில் அரசு கேபிளுக்கு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறையின் அதிகாரியான சந்தோஷ்பாபுவே இதுவரை தலைவராக இருந்த நிலையில், அதாவது அமைச்சர் மணிகண்டனே கவனித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை தமிழக அரசு கேபிள் கழகத் தலைவராக நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த விவகாரத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான மணிகண்டனுக்குத் தெரியாமலேயே முதல்வர் இந்த நியமனத்தை நடத்திவிட்டார். இதில் மணிகண்டனுக்கு கடும் கோபம்.

இந்தக் கோபத்தைத்தான் நேற்று பிரஸ்மீட்டில் கொட்டிவிட்டார் மணிகண்டன்.

:”2 லட்சம் கனெக்‌ஷன் கொண்ட தனியார் நிறுவனத்தை வைத்திருக்கும் அமைச்சர் உடுமலை, கேபிள் கழக தலைவராகிவிட்டார். அவர் முதலில் தன்னிடம் இருக்கும் கனெக்‌ஷன்களை அரசு கேபிளுக்கு வழங்க வேண்டும். அவரை நியமிப்பது பற்றி முதல்வர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை” என்று கூறிய மணிகண்டன், “இது அம்மா கொடுத்த பதவி” என்று அழுத்தம் திருத்தமாக தனது அமைச்சர் பதவியைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

இதெல்லாம் முதல்வர் எடப்பாடிக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டன. அரசியலில் எப்போதுமே ஒரு திடீர் முடிவுக்குப் பின்னால் பல காரணிகள் இருக்கும்,. அவை சேர்ந்துதான் ஒட்டுமொத்தமாக திடீர் முடிவுக்குப் பின்னணியாக அமையும்.

அந்த வகையில் அமைச்சர் மணிகண்டன் மீது முதல்வருக்கு ஏகப்பட்ட கோபங்கள் இருந்தன என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். மக்களவைத் தேர்தல் நேரத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மீது கவனம் செலுத்தாமல், ராமநாதபுரம் மக்களவை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமிக்குத் தகவல் சென்றது. அப்போதே இதுகுறித்து மணிகண்டனிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார் முதல்வர்.



கடந்த ஒரு வாரமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தை சமன் செய்வது என்ற பெயரில் நடக்கும் மணல் அள்ளும் விஷயத்தில் திமுக காரர்களுக்கே அதிக வாய்ப்பளிக்கப்படுவதாகவும், விதிமுறைகள் மீறப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டு இது முதல்வருக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இது எல்லாமுமாக சேர்ந்துதான் அமைச்சர் மணிகண்டனின் பதவியைப் பறித்துவிட்டார் முதல்வர். தான் வலுவாக இருக்கிறோம் என்பதைக் காட்டவும், இனி தனக்கு எதிராக அதிமுகவுக்குள் இருந்துகொண்டு அரசியல் செய்ய முடியாது என்பதைச் சொல்லவும்தான் இந்த பதவி நீக்கம் செய்திருக்கிறார் எடப்பாடி.

இதற்கு மணிகண்டனின் ரியாக்‌ஷன் என்னவென்று தெரிந்தபிறகுதான் அடுத்த கட்ட அரசியல் சூடுபிடிக்கும்.

#thanks_to minnambalam.com

Post a Comment

0Comments

Post a Comment (0)