முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். கடந்த, 2017 செப்டம்பரில், இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியிடம் இந்த வழக்கு சென்றது. மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சத்யநாராயணன், கடந்த ஜூலை மாதம் முதல் விசாரணையை தொடங்கி இருதரப்பு வாதங்களையும் கேட்டு வந்தார்
மொத்தம் 12 நாட்கள் நடந்த விசாரணை முடிவடைந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவரவுள்ளதாக செய்திகள் கசிந்தது. இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் எனன எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கின் தீர்ப்பை, இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி சத்யநாராயணன் வழங்குவார் என நள்ளிரவு வெளியான சென்னை ஐகோர்ட் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.