
ரேஷன்கார்டைப் பயன்படுத்தி தொடர்ந்து 3 மாதங்கள் பொருட்கள் வாங்காதவர்களின் கார்டுகளை ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநிலங்களின் உணவுத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் ராம் விலாஸ் பாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டில் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் முறையாக கார்டுகளை பயன்படுத்துவதில்லை. சில பணக்காரர்கள் ரேஷன்கார்டை பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது எளிதாகும். யாரெல்லாம் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்காமல் இருக்கிறார்களோ அவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்யலாம் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
அதேசமயம், ரேஷன் கார்டுகள் இருந்து வயது முதிர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்ர காரணமாக ரேஷன் கடைகளுக்குவரமுடியாத நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சப்ளை செய்யுங்கள் எனவும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்.
பருவமழை நாடுமுழுவதும் நன்கு பெய்து வருவதால், அடுத்த சில மாதங்களில் காய்கறிகள் விலை உயரக்கூடும், பண்டிகை நேரங்களில் மக்களுக்கு காய்கறிகள் போதுமான அளவில் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய கூடுதல் கண்காணிப்பில் இருக்க வேண்டும் .
பட்டினிச்சாவு எந்த மாநிலத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. அதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறிகளை மாநில அரசுகளுக்கு வழங்கி இருக்கிறோம். ஆதலால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேவைப்படுவோருக்கு ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வழங்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.
கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் உணவுப்பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்ததில் இருந்து ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் விலை உயர்த்தப்படவில்லை. அரிசி கிலோ ரூ.3க்கும், கோதுமை ரூ.2க்கும் வழங்கி வருகிறோம்.
இவ்வாறு ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் டெல்லியில் ஜூன் 29ஆம் தேதி மாநில உணவுத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டைத் தொடர்ந்து, “மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய முடியும்” என்றும் கூறியிருந்தார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்து, நேற்று (ஜூலை 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்கள் தொடர்ந்து மூன்று மாதங்கள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்காமல் இருப்பதற்கு உரியக் காரணங்கள் இருக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
மூன்று மாதங்கள் தொடர்ந்து நியாயவிலை பொருட்களை வாங்காவிடில் குடும்ப அட்டை ரத்து செய்வது என்பது ஏழை எளிய மக்களுக்குச் செய்யும் பெரும் அநீதியாகும். குடும்ப அட்டையை மக்கள் வெறும் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் பயன்படுத்தாமல் அரசின் பல தேவைகளுக்கான ஆவணமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான தொகையின், நிலுவைத் தொகையை வழங்காத மத்திய அரசு, குடும்ப அட்டை ரத்து செய்வதில் மட்டும் முனைப்புடன் செயல்படுவது ஏழை எளிய நடுத்தர மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
எனவே, குடும்ப அட்டை ரத்து செய்யும் முடிவைத் திரும்பப் பெற்று மாநிலங்களில் பகுதி நேரங்களில் மட்டுமே திறந்திருக்கும் பல ரேஷன் கடைகளை முழு நேரக் கடைகளாக மாற்றவும், மாநில அரசுகளுக்கு ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்ய வேண்டிய தொகையின் நிலுவையை உடனே வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.