Breaking

#காவிரி_விவகாரம்? முறைப்படுத்த ஒழுங்காற்றுக் குழுவுக்கு அறிவுரை!

நம்நாடு செய்திகள்
0


காவிரிப் படுகை நீர்த் தேக்கங்களில் நீர் மதிப்பீடு தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், அதற்காகப் பயன்பாட்டில் உள்ள சாதனங்கள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்யுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுக்கான தலைவர்கள், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் மத்திய நீர் ஆணையத்தின் தலைவரும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான மசூத் ஹுசைன் தலைமையில் தில்லியில் ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில், தமிழகத்திற்கான நிகழாண்டு ஜூலை மாதத்திற்குரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளரும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவருமான நவீன் குமார் தலைமையில் தில்லியில் உள்ள சேவா பவனில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. தமிழக அரசின் நீர் வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் ஆர். செந்தில் குமார் உள்பட அனைத்து மாநிலப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், காவிரிப் படுகையில் நீர் அளவீடு தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தும், நீர் அளவீடு, மதிப்பீடுக்கான புதிய வழிமுறைகளைக் கையாள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டன. பின்னர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லியில் ஜூலை 2-இல் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஒழுங்காற்றுக் குழுவுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
காவிரிப் படுகையில் நீர் வளிமண்டல சூழல், காவிரிப் படுகையில் கிடைக்கக் கூடிய நீர் பற்றிய தரவுகளைத் தொகுப்பதற்கான ஏற்பாடுகள், ஒவ்வொரு நீர்த் தேக்கத்திலும் மாதாந்திர நீர் அளவைத் தொகுப்பதற்கான வழிமுறைகள், மாநில அரசுகள், மத்திய நீர் ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றிடமிருந்து பெறப்படும் தரவு வடிவமைப்புகளுக்கான தேவை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
புள்ளிவிவரத் தரவுகள் சேகரிப்புக்கான பல்வேறு வடிவங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றின் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் உறுப்பினர்கள், தங்களது கருத்துகளை ஜூலை 16-இல் அளிப்பது என கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், காவிரிப் படுகையில் உள்ள 8 நீர்த் தேக்கங்களில் ஆவியாவதால் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்க திறன்மிக்க வகையில் மதிப்பீடு செய்வதற்கான வழிமுறையை உருவாக்க ஒழுங்காற்றுக்கு குழுவுக்கு வழிகாட்டுமாறு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது, தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள சாதனங்கள், அம்மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள் ஆகியவை குறித்த நிலவர அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
அடுத்த இரு வாரங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது பரிந்துரைகளை அளிக்கும். அப்பரிந்துரைகள் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவால் விவாதிக்கப்பட்டு, பொதுவான வழிமுறைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பின்பற்றும் வகையில் மதிப்பீடு செய்யப்பட்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்குப் பரிந்துரைக்கப்படும். இந்த விஷயத்தில் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் தோராயமாக ஜூலை 19-ஆம் தேதி தில்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டடுள்ளது. தற்போது காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் வழக்கத்திற்கு மேல் நல்ல மழை பெய்து வருவதால் அணைகளுக்கு ஒழுங்காற்றுக் குழுவினர் நேரில் சென்று மதிப்பீடு செய்யும் தேவை எழவில்லை என்றார் அவர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)