Breaking

உழைக்கும் வர்க்கத்தை நசுக்கும் செயல்? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

நம்நாடு செய்திகள்
0


கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலத் திட்ட வரைவு அறிக்கையை மத்திய தொழிலாளர் துறை இணையதளத்தில் ஏன் வெளியிடவில்லை என்று மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தது உச்ச நீதிமன்றம்.

ஏழை மக்கள் மீது காட்டும் அக்கறை இதுதானா, எங்களிடம் நகைச்சுவை செய்கிறார்களா என நீதிபதிகள் காட்டமான கேள்விகளைத் தொடுத்தனர்.

கட்டுமானத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு தனியாக நலத்துறை அமைப்பதற்காக ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டும் அதை முறையாக அரசு அமைக்கவில்லை. இது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கட்டுமானத் தொழிலாளர் நலத்துறைக்காகத் தனியாக வரைவு திட்டத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனால் வெளியிடவில்லை.



இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மதன்பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களை கடுமையாகச் சாடினார்கள்.

நாடு முழுவதும் கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக வரைவுத் திட்டத்தை தயாரித்து தொழிலாளர் நலத்துறை இணையதளத்தில் பதிவிட உத்தரவிட்டு இருந்தோம். ஆனால், நீங்கள் பதிவிட்டதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தீர்கள். ஆனால், நாங்கள் சோதனையிட்டபோது அந்த வரைவு திட்டம் ஏதுமில்லை.

அப்படியென்றால், உங்களின் பிரமாணப் பத்திரம் போலியானதா? நீங்கள் ஏழைகளின் வாழ்க்கையோடு தொடர்புள்ள ரூ.30 ஆயிரம் கோடி திட்டத்தில் விளையாடுகிறீர்கள். இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படுவது ஏழைகள்தான். இதுதான் ஏழை மக்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறை, கருணையா? கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காகவும், கல்வி, உடல்நலம், சமூக பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு என்ன செய்துள்ளீர்கள்.

நாங்கள் உங்களுக்கு உத்தரவிட்டபின்பும், நீங்கள் இணையதளத்தில் வரைவு திட்டத்தை பதிவேற்றம் செய்யவில்லை. யாரை முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள். ஒரு மாதம் மட்டுமே அந்த வரைவுத் திட்டத்தை பதிவேற்றம் செய்துவிட்டு நீக்கிவிட்டீர்கள். என்ன நடக்கிறது என்பது தெரிய வேண்டும்.

மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தின் செயலாளர் அடுத்த முறை நேரில் ஆஜராக வேண்டும். அவரிடம் இது எப்படி நடந்தது என விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் காட்டமாகக் கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)