Breaking

முன்னாள் முதல்வரின் மரண மர்மம்! சிக்குகிறாரா சசிகலா?

நம்நாடு செய்திகள்
0


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 9 மாதங்களாக விசாரித்து வருகிறது. ஆணையத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் நேரடியாக வாக்குமூலமும் அளித்து உள்ளார். இதில் , 2016 செப்டம்பர் 22ம் தேதி அன்று போயஸ்கார்டனில் நடந்த சம்பவங்கள் குறித்து இருவரும் அளித்த தகவலில் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 22ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன்னை சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு கார்டன் வருமாறு அழைத்ததாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு இருமல், காய்ச்சல் இருப்பதாகவும் சசிகலா கூறினார் என சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் சசிகலா அளித்த பிரமாணபத்திரத்தில் மருத்துவர் சிவக்குமாரை தொலைபேசியில் அழைத்தது தொடர்பான தகவல் இல்லை.

செப் 22ம் தேதி மூன்றாவது முறையாக ஜெயலலிதாவை இரண்டாம் தளத்தில் உள்ள அவருடைய அறையில் பார்த்த போது, சசிகலா மட்டுமின்றி இரண்டு பணிப்பெண்கள் இருந்ததாக சிவக்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஆனால் சசிகலா அளித்த பிரமாணபத்திரத்தில் இரண்டு பணிப்பெண்கள் குறித்த தகவல் இல்லை.

அதேநாள் இரவு ஜெயலலிதா கழிவறை செல்வதாக சொல்லிவிட்டு சென்றதாகவும் அப்போது சசிகலாவை உடன் அழைத்துச்செல்ல நான் அறிவுறுத்தினேன் என்றும், சசிகலா கழிவறையின் வெளி பகுதியில் நிற்க ஜெயலலிதா வெளியே வந்து அவரே படுக்கையில் அமர்ந்து கொண்டதாக கூறியுள்ளார் சிவக்குமார். ஆனால் சசிகலா பிரமாணப் பத்திரத்தில் இரவு 9:30 மணியளவில் உறங்குவதற்கு முன்பாக எப்போதும் போல பல் துலக்க குளியலறைக்கு சென்ற ஜெயலலிதா, ' சசி மயக்கமாக இருக்கிறது இங்கே வா' என்று அழைத்ததாகவும் சசிகலா அவரை உள்ளே சென்று அழைத்து வந்து படுக்கையில் உட்கார வைத்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் கடுமையான இருமல் வந்து அப்படியே தன்மீதும் சசிகலா மீதும் ஜெயலலிதா சாய்ந்துக்கொண்டார் என்பதும் சிவக்குமாரின் வாக்குமூலம். ஆனால் மயங்கிய நிலையில் ஜெயலலிதா தன் தோளில் சாய்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக அப்போது தான் அறைக்குள் டாக்டர் சிவக்குமார் வந்ததாகவும் கூறுகிறார் சசிகலா.

ஜெயலலிதா மயங்கியவுடன் ட்ராலியில் இருந்த அழைப்பு மணியை அழுத்தி, அழைத்ததின் அடிப்படையில் தனிப்பாதுகாவலர்கள் அறைக்குள் வந்ததாக சசிகலா தெரிவித்துள்ள நிலையில், தான் சத்தம் போட்டு அழைத்ததாலேயே தனிப்பாதுகாவலர்கள் அறைக்குள் வந்ததாக சிவக்குமார் முரண்படுகிறார்.

மயங்கியவுடன் ஜெயலலிதா அறைக்கு தனிப்பாதுகாவலர்கள் வீரப்பெருமாள் ,கந்தசாமி , மற்றும் ஓட்டுநர் கண்ணன் மற்றும் பணியில் இருந்த வீட்டு பணியாளர்கள் வந்ததாக சசிகலா கூறியுள்ளார். ஆனால் சிவக்குமாரின் வாக்குமூலத்தில் ஓட்டுநர் கண்ணனும், வீட்டில் பணிபுரிபவர்களும் அறைக்கு வந்ததாக தகவல் இல்லை.

அப்பலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் போதே கிரீம்ஸ் ரோடு அருகே ஜெயலலிதாவிற்கு நினைவு திரும்பி கண் விழித்து என்னிடம் 'எங்கிருக்கிறேன்' என கேட்க அப்பலோ மருத்துவமனைக்கு செல்கிறோம் கவலைபடாதீங்க என பதிலளித்ததாக சசிகலா பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.

ஆனால் ஆம்புலன்சில் செல்லும் போது சசிகலாவிடம் 'எங்கிருக்கிறேன்' என ஜெயலலிதா கேட்டதாக சிவக்குமார் கூறவில்லை. மாறாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று பதினைந்து நிமிடம் கழித்து சில சோதனைகள் முடிந்த பின்னரே தன் பெயரை குறிப்பிட்டு 'எங்கே இருக்கிறோம்' என ஜெயலலிதா கேட்டதாக சிவக்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார் .

இவ்வாறு இருவரும் அளித்த தகவல்கள் முரண்படும் நிலையில், ஆணையம் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு முறை மருத்துவர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில் அடுத்தகட்டமாக சசிகலாவை நேரடியாக விசாரிக்க ஆணையம் தரப்பில் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)