
அமைச்சா் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் மதிவாணனை திருவாடானைக்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்தவா் வ.து.நடராஜன். முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகத்தின் மாநில நிா்வாகியுமான இவரது மகன் மதிவாணன். இவா் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சைப் பிரிவு மருத்துவராக உள்ளாா். இந்த நிலையில், இவா் திருவாடாணை தாலுகா மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி மருத்துவா் மதிவாணன் உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தாா்.
அவரது மனுவில், தனக்கான இடமாறுதல் உத்தரவில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மணிகண்டன் அறிவுறுத்தலின் பேரில் இடமாறுதல் வழங்கப்படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை திருவாடானையில் பணியாற்றுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. என்மீது எந்தவிதப் புகாரும் இல்லாத நிலையில், இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதை ரத்து செய்யவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவானது நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராமநாதபுரத்திலிருந்து திருவாடானைக்கு மதிவாணனுக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.