
தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவிடம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று பெற்றுக் கொண்டார்.
விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:–
மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சாதனை சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழக சுகாதாரத்துறையின் மணிமகுடத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக வழங்கப்படும் இவ்விருது ஒரு மைல்கல் ஆகும்.
2030–ம் ஆண்டுக்குள் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை 130 ஆக குறைக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கை, 2016–17–ம் ஆண்டின் விவரப்படி 62 ஆக குறைத்து இமாலய சாதனையை தமிழகம் புரிந்துள்ளது.
இந்த சாதனைக்கு தமிழகம் விருது பெற்றிருக்கிறது. இதுவரை அடைந்த சாதனைகளை எண்ணி நிறைவடையாமல், இன்னும் எட்ட வேண்டிய சாதனை சிகரத்தை நோக்கி தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து பயணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுடான், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.