Breaking

ஜம்மு-காஷ்மீர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த "ஆளுநரின் தொலைபேசி அழைப்பு!

நம்நாடு செய்திகள்
0


மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி-பாஜக கூட்டணி அரசின் ஆட்சியானது, ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோராவின் தொலைபேசி அழைப்பு மூலம் முடிவுக்கு வந்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலகத்தில் மெஹபூபா முஃப்தி தனது வழக்கமான பணிகளில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது தலைமை செயலர் பி.பி. வியாசுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆளுநர் வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி எங்குள்ளார்? அவருடன் உடனடியாக தொலைபேசியில் பேச ஏற்பாடு செய்யுங்கள் எனக் கேட்டார்.
தில்லியில் பாஜக பொது செயலாளர் ராம் மாதவ், மெஹபூபா அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த தொலைபேசி அழைப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து, மெஹபூபாவுடன் வோரா தொலைபேசியில் பேசுவதற்கு வியாஸ் ஏற்பாடு செய்தார். அப்போது மெஹபூபா முஃப்தியிடம், பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னாவிடம் இருந்து தனக்கு கடிதம் வந்திருப்பதாகவும், அந்த கடிதத்துடன் பாஜக அமைச்சர்கள் ராஜிநாமா கடிதங்களும் வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மெஹபூபா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றுக் கொள்வதென்று முடிவு செய்திருப்பதையும் வோரா தெரியப்படுத்தினார்.
ஆளுநர் தொலைபேசியில் தெரிவித்த இந்தத் தகவலை மெஹபூபா முஃப்தி பொறுமையாகவும், அமைதியாகவும் கேட்டார். அதன்பின்னர் இந்த விவகாரம் குறித்து பாஜகவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று அவர் முடிவெடுத்தார். ஆளுநரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வது தொடர்பான கடிதத்தை அளிக்கும் முடிவையும் அவர் எடுத்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு பின்னரே, தில்லியில் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், மெஹபூபா முஃப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெறுவது தொடர்பான தகவலை செய்தியாளர்களிடம் வெளியிட்டார் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)