தமிழகத்தில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் 19 சாலைகளை விரிவுபடுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.
சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,
இந்தியாவில் 2-வது பசுமைவழிச்சாலை திட்டம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.இதில் அரசுக்கு நல்லபெயர் கிடைத்தும் விடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டி, எதிர்க்கட்சிகள் பசுமை வழிச்சாலை திட்டத்தினை பூதாகரமாக்குகின்றன.எந்த ஒரு தனி நபருக்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பசுமை வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.சென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்படும் இந்த பசுமை வழிச்சாலையின் மூலம், சேலம் மட்டுமன்றி, ஈரோடு,கரூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் வளம் பெருகும். கேரளாவிற்கு இணைப்பு சாலையாக இந்த சாலை அமையும்.
சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழித்தடத்தில் தற்போது, 2.57 கோடி வாகனங்கள் சென்று வருகின்றன.பசுமைவழிச்சாலை திட்டம் நிறைவடைய 4 ஆண்டுகள் வரை ஆகும்.அதற்குள்ளாக, இந்த வாகனங்களின் எண்ணிக்கை, மேலும் 70 லட்சம் அதிகரித்து, 3.27 கோடி வாகனங்களாக போக்குவரத்து உயரும் என்பதால், இந்த சாலை அவசியமான ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் சாலை விபத்தில் 16,224 பேர் உயிரிழந்துள்ளனர். விலை மதிக்க முடியாத உயிரை காக்கும் வகையில், சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்கும் விதமாக சாலை அமைப்பது அரசின் கடமையாகும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை அமைக்கப்படுவதால், வளர்ச்சிக்கேற்ற வகையில், அவற்றை விரிவாக்கம் செய்ய முடியும்.
பசுமை வழிச்சாலையை பொருத்தவரை, இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டமாகும்.அதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்தி தருவது மட்டுமே மாநில அரசின் பங்களிப்பாகும்.மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் இந்த திட்டத்தினை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, பெரிய அளவில் லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு எரிபொருள் மிச்சப்படுத்தப்படும்.
பசுமைவழிச்சாலைக்காக எடுக்கப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும்.திமுக ஆட்சியில் சாலை அமைக்கும் பணிக்காக 3,023 கிலோமீட்டர் தூரம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது வழங்கப்பட்டதை விட தற்போது, நிலங்களின் வழிகாட்டி மதிப்பீடு உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.தென்னை மரத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்கும்.
தமிழகத்தில் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கைகளை இழந்த ஒருவருக்கு, உயிரிழந்தவரின் கைகளை எடுத்துப் பொருத்தி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவிலான சாதனை செய்யப்பட்டுள்ளது.அந்த மருத்துவர்களை பாராட்டி எந்த சமூக ஆர்வலரும் கருத்து தெரிவிப்பதில்லை.
தமிழகத்தில் 19 சாலைகளை விரிவுபடுத்தி, சாலைகள் அமைத்திட மத்திய அரசு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும், 21 சாலைகளை விரிவாக்கம் செய்திட மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் பயனடையும் வகையில், 40 சாலைகளை விரிவாக்கம் செய்ய உள்ளோம்.
இந்திய அளவில், தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 46.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உயர்கல்வி பயிலும் நிலையில், அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது அரசின் கடமையாகும். வேலைவாய்பை உருவாக்குவதற்காகவே, சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.
பேட்டியின் போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.