
சென்னையில் செல்போனை பறிப்பது எப்படி? என இணையதளத்தை பார்த்து பயிற்சி எடுத்து ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய மோட்டார் சைக்கிளில் வந்து செல்போனைப் பறிக்க முயன்ற இளைஞர்கள் சிக்கினர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூர் கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (37). இவருடைய மனைவி காமாட்சி (32). இவர்களது உறவினர் இல்லத் திருமணம் பக்கத்தில் உள்ள காலடிப்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் நடராஜன் கலந்துகொள்ளாததால அவர் மனைவி காமாட்சி மட்டும் திருமணத்திற்குச் சென்றிருந்தார்.
திருமணம் முடிந்த பின்னர் மதியம் தனது வீட்டுக்குச் செல்வதற்காக மண்டபத்தை விட்டு வெளியே நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது கணவர் நடராஜனிடமிருந்து போன் வரவே, கணவருடன் செல்போனில் பேசியபடியே காமாட்சி தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் திடீரென காமாட்சியிடம் இருந்த செல்போனைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி 'திருடன் திருடன்' எனக் கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், இளைஞர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் அவர்களை மோட்டார் சைக்கிளுடன் கீழே தள்ளி விட்டனர்.
தப்பி ஓட முயன்ற 2 பேரையும் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருவொற்றியூர் போலீஸாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். போலீஸ் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (22), ராஜேஷ்குமார் (22) என்பது தெரியவந்தது. இருவரும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
கூடுதலாக வருமானம் பார்க்க என்ன செய்யலாம் என இருவரும் யோசித்த போது சென்னையில் சமீபகாலமாக வளம் கொழிக்கும் தொழிலாக இருக்கும் செல்போன் பறிப்பை செய்து பணம் சம்பாதிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். ஆனால் எப்படிப் பறிப்பது என்று தெரியாததால் யூடியூபில் உள்ள வீடியோக்களை போட்டுப் பார்த்துக் கற்றுக்கொண்டுள்ளனர்.
பின்னர் தொழிலை செய்யத் தொடங்கும் முன் ஒரு யோசனை தோன்றியுள்ளது. மோட்டார் சைக்கிளில் 'பிரஸ்' என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால் போலீஸாரும் எங்கு போனாலும் மடக்க மாட்டார்கள் என்று முடிவெடுத்து 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டியதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 5 செல்போன்களையும், 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.