திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை, அத்திமூரில் குழந்தைகளை கடத்த வந்த கும்பல் என நினைத்து கோவிலுக்கு வந்த சென்னை பக்தர்களை கிராம மக்கள் தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்தார் 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அத்திமூர் கிராமம் உள்ளது. இங்குள்ள தண்ணீர்குளம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் விசேஷமானது என்பதால் பக்தர்கள் அதிகம் வருவது வழக்கம். இந்த கோவிலின் அம்மன் பலருக்கும் குலதெய்வம் ஆகும். கோவிலின் விசேஷ நாட்களில் வெளியூரிலிருந்தும் குலதெய்வத்தை கும்பிட பொதுமக்கள் வருவதுண்டு.
பல்லாவரத்தை சேர்ந்த ருக்குமணி (65) மற்றும் வெங்கடேசன் (54). இவர்களது உறவினர்கள் மோகன்குமார் (43), சந்திரசேகரன் (55) ஆகிய இருவரும் மலேசியாவில் வசிக்கின்றனர். இவர்களது பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள சாத்தனூர் பகுதியாகும்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த மோகன்குமார், சந்திரசேகரன் இருவரும் பல்லாவரத்தில் உள்ள ருக்குமணி வீட்டில் தங்கியிருந்தனர். சாத்தனூர் அருகேயுள்ள குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்த விரும்பினர். அதன்படி, ருக்குமணி, வெங்கடேசன், மோகன்குமார், சந்திரசேகரன் உள்ளிட்டோர் காரில் நேற்று முன்தினம் சாத்தனூர் சென்றனர். காரை பல்லாவரத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (44) என்பவர் ஓட்டிச் சென்றார்.
அத்திமூர் வழியாக சென்றபோது கோயிலுக்குச் செல்ல வழி தெரியாமல் தவித்தனர். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரிடம் வழி கேட்டனர். அவர் கூறிய பாதையில் காரில் சென்றனர். சிறிது தொலைவில் சிவாவின் 2 மகள்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த ருக்மணி குழந்தைகள் இருவருக்கும் மலேசியாவில் இருந்து வாங்கி வந்த சாக்லெட்டை கொடுத்துள்ளார்.
அன்பின் மிகுதியால் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்ததை சற்று தொலைவில் இருந்து பார்த்த சிவா, குழந்தைகளை கடத்தும் கும்பல் என நினைத்து கூச்சலிட்டுள்ளார். இதனால் பதற்றமான ருக்மணியும் மற்றவர்களும் வேகமாகச் சென்றுவிட்டனர். கார் செல்லும் வழியில் அத்திமூர் கூட்டுச்சாலை பகுதியில் இருப்பவர்களுக்கு சிவா, செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அங்கு திரண்ட பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ருக்மணி வந்த காரை மடக்கி அடித்து நொறுக்கினர். மேலும், காரில் இருந்தவர்களை வெளியேற்றி சரமாரியாக தாக்கினர். அவர்கள் சொல்லும் எதையும் காதில் வாங்கும் மன நிலையில் இல்லாத அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் 65 வயது பெண் ருக்மணியை பெண் என்று பாராமல் பலரும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். உடன் வந்த மற்றவர்களையும் அந்த கும்பல் நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த நான்கு பேரும் ரத்தவெள்ளத்தில் மூர்ச்சையாகி விழுந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் போளூர் காவல் துறையினர் விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்க முடியாமல் திணறினர். கூடுதலாக காவல் துறையினரை வரவழைத்து பொதுமக்களை விரட்டினர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனைவரையும் மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ருக்குமணி உயிரிழந்தார். இதையடுத்து மற்ற 4 பேரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி வனிதாவிடம் கேட்டதற்கு, ‘‘குழந்தையை கடத்த வந்தவர்கள் என நினைத்து கிராம மக்கள் ஐந்து பேரையும் தாக்கியதில் ருக்குமணி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி விசாரித்து வருகிறார். இந்த கொலை வழக்கு குறித்து தாக்குதல் நடத்தியவர்கள் யார்? என்று அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேரையும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றும்படி கூறியுள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க காவல் துறையினர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தும்படி கூறியுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.
வேலூர், தி.மலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் கும்பல் குறித்த போலியான தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அச்சத்தில் உள்ள பொதுமக்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், வடமாநில நபர்களை, வெளியூரைச் சேர்ந்த நபர்களை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து அடித்து உதைப்பது தொடர்ந்து நடக்கிறது.
கிராம மக்களின் காட்டுமிராண்டித்தனமான இந்த சம்பவத்தில் அப்பாவி பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கியவர்கள் யார் என கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல் - பெண் உயிரிழப்பு!
5/10/2018 07:28:00 AM
0
Tags