தமிழக முதல்வர் எடப்பாடியை போற்றும் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 45 நாள் போராட்டத்திற்கு பின் திரைப்படங்கள் தியேட்டர்களில் திரையிடப்பட்டன. பலநாட்களுக்கு பிறகு தியேட்டர் வந்த பொதுமக்களுக்கு ஒரு அதிர்ச்சி. அதாவது, தமிழக அரசின் செய்தி துறை சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி தயாரிக்கப்பட்ட விளம்பரம் தான் அவை. தனக்கு வேலை கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு பெண் ஒருவர் கோவிலில் அர்ச்சனை செய்வது போன்று அந்தக் காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த விளம்பரத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்க, தியேட்டரில் ஒளிபரப்பப்பட்ட அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டது. பிரச்சனை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கோவிலுக்கு வரும் ஒரு தம்பதி, “பரணி நட்சத்திரம். பிரவீணுக்கு அர்ச்சனை செய்யுங்கள்” என்று அங்குள்ள குருக்களிடம் கூறுகிறார்கள். அந்த நேரத்தில் மூன்று சக்கர நாற்காலியில் இருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் குருக்களை அழைத்து, “அர்ச்சனை செய்ய வேண்டும். என் பேருக்கு அல்ல. சாமி பேருக்கு” என்று கூறுகிறார்.
குருக்களும், “பேஷா பண்ணிடலாம். எந்த சாமிக்கு” என்று கேட்கிறார்.
அதற்கு பதில் அளிக்கும் அந்த மாற்றுத்திறனாளி இளைஞர், “நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான். அவருதானே எனக்கு வேலை கொடுத்த சாமி” என்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அரசு சார்பில் கூறியதாவது: "தமிழக அரசு சார்பில் தியேட்டர்களில் ஒளிபரப்பப்பட்ட குறும்படம் நிறுத்தப்பட்டுவிட்டது. புதிதாக எந்த குறும்படமும் தியேட்டர்களுக்கு வழங்கப்படவில்லை” என்று அறிவித்தது.
ஒருவேளை தியேட்டர்களில் ஒளிபரப்ப ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விளம்பரங்களில் இதுவும் ஒன்றாக இருந்து, தற்போது இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் மட்டும் வெளியாகிவிட்டதோ என்று சிலர் சந்தேகிக்கின்றனர்.
https://mobile.twitter.com/savukku/status/993862364469448704/video/1