
ஐபிஎல்லைப் புறக்கணிக்கக் குரல் கொடுத்ததுபோல் சினிமாவையும் புறக்கணிக்கக் குரல் கொடுப்பீர்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்பதற்காக, ஐபிஎல்லை இடம் மாற்றக்கோரி பலரும் குரல் கொடுத்தனர்; போராட்டங்களும் நடைபெற்றன. அதனால் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 47 நாட்களாகத் திரையுலகினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், நாளை முதல் புதுப்படங்கள் ரிலீஸாக உள்ளன. எனவே, ஐபிஎல் கிரிக்கெட்டை இடம் மாற்றியது போல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை புதுப்படங்களின் ரிலீஸும் தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்று உதயநிதி ஸ்டாலின் கூட ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
ஆர்.ஜே. பாலாஜியும் தற்போது இதே கேள்வியைக் கேட்டுள்ளார். “வேலை நிறுத்தத்துக்குப் பிறகு நிறைய நல்ல மாற்றங்களுடன் சினிமாத்துறை மறுபடியும் வந்துள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான தினசரி சம்பளக்காரர்கள், தன்னுடயை குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை உரிய நேரத்தில் கட்ட முடியும். இந்த நல்ல தீர்வை அடைவதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.
அதேசமயம், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை சினிமாவையும் புறக்கணிக்கக் குரல் கொடுப்பார்களா? இரண்டு தவறுகள் ஒரு நல்ல விஷயத்துக்குத் தீர்வாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தவறை ஏற்றுக்கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.
