Breaking

தாஜ்மஹாலுக்கு உரிமையாளர் யார்? ஆவணங்களைக் கேட்கிறது உச்ச நீதிமன்றம்

நம்நாடு செய்திகள்
0


தாஜ்மஹால், வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானது என்பதை நிரூபிப்பதற்கு ஷாஜஹான் கையெழுத்திட்டுக் கொடுத்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகலாய அரசர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய தாஜ்மஹாலுக்கு உத்தரப் பிரதேச மாநில ஸன்னி வக்ஃபு வாரியம் உரிமை கொண்டாடி வருகிறது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய தொல்லியல் துறை கடந்த 2010-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப் போது, வக்ஃபு வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கூறியதாவது:
இந்தியாவில் முகலாயர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு தாஜ்மஹால் உள்ளிட்ட பாரம்பரியக் கட்டடங்கள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அந்த கட்டடங்களை இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது என்று நீதிபதிகள் கூறினர். அதற்கு, ஷாஜஹானே தாமாக முன்வந்து தாஜ்மஹாலை வக்ஃபு வாரியத்துக்கு கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார் என்று வக்ஃபு வாரிய வழக்குரைஞர் கூறினார். ஆனால், ஷாஜஹான் எழுதிக் கொடுத்ததாகக் கூறப்படும் ஆவணம் எதுவும் இல்லை என்று தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
ஷாஜஹானுக்கும், அவரது மகன் ஒளரங்கசீப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒளரங்கசீப் வெற்றி பெற்ற பிறகு, ஷாஜஹான் ஆக்ரா கோட்டையில் கடந்த 1658-ஆம் ஆண்டில் சிறை வைக்கப்பட்டார். பிறகு, கோட்டையிலேயே அவர் 1666-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அப்படியிருக்கும்போது, ஷாஜஹான் எப்படி கையெழுத்திட்டிருக்க முடியும்?
அப்படியானால், ஷாஜஹான் கையெழுத்திட்டு எழுதிக்கொடுத்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வக்ஃபு வாரிய வழக்குரைஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கு, சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, வழக்கு விசாரணை, வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Post a Comment

0Comments

Post a Comment (0)