கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற வட இந்தியத் தலைவர்களைக் களமிறக்கி, உள்ளூர் தலைவரான எடியூரப்பாவை பாஜக 'டம்மி' ஆக்கிவிட்டதாக சித்தராமையா ட்விட்டரில் கிண்டல் செய்திருக்கிறார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 12-ம் தேதி நடைபெறுவதால் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றும் வகையில் பாஜக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் என ஏராளமானோரை பாஜக கர்நாடகாவில் களமிறக்கியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், ''பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் போன்ற வட இந்தியத் தலைவர்களை இறக்குமதி செய்திருப்பதன் மூலம் இங்கு (கர்நாடகா) அவர்களுக்கு தலைவர்களே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள். உள்ளூர் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பாவை டம்மியாக்கி ஆக்கிவிட்டீர்களே!'' என கிண்டலுடன் பதிவிட்டுள்ளார்.
சித்தராமையாவின் இந்த ட்விட்டர் பதிவால் காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
Post a Comment
0Comments