
ஆகஸ்டில் நடைபெறவுள்ள, ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற, அ.தி.மு.க., தயவு தேவை. இந்த தேர்தல், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு, தேசிய அளவில் கூட்டணி உருவாவதற்கான அச்சாரமாக அமைய உள்ளது.
ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் சார்பில், 2012ல், குரியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம், ஆகஸ்ட் மாதம் முடிவடைகிறது. புதிய துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைத்தது. தேர்தல் முடிவு வெளியான நேரத்தில், அப்போதைய முதல்வர், ஜெயலலிதா, நிருபர்களை சந்தித்தார். அப்போது, 'பா.ஜ., ஆட்சி அமைக்க, நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா' என, கேட்கப்பட்டது. அதற்கு, ஜெ., அளித்த பதிலில், 'அக்கட்சி ஆட்சி அமைக்க, அ.தி.மு.க., ஆதரவு தேவையில்லை' என்றார்.
'ராஜ்யசபாவில், பா.ஜ., கொண்டு வரும் மசோதாக்களை நிறைவேற்ற, அ.தி.மு.க.,வின் ஆதரவு தேவைப்படுமே' என கேட்டதற்கு, 'அதற்கான சூழ்நிலை வரும்போது பார்ப்போம்' என்றார்.ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, அ.தி.மு.க., ஆதரவு பெறப்படாமல், ராஜ்யசபா வில், மத்திய அரசின் மசோதாக்கள்
நிறை வேற்றப்பட்டு வந்தன. ஜி.எஸ்.டி., விவகாரத்தில், 'மசோதாவில், சில மாற்றங்கள் செய்தால் ஆதரிக்கலாம்' என, காங்., விடுத்த கோரிக்கையை, பா.ஜ., ஏற்றதால், ராஜ்ய சபாவில், அம்மசோதாவும் பிரச்னையின்றி நிறைவேற்றப் பட்டது. இதனால், அ.தி.மு.க.,வின் ஆதரவை கேட்கும் நிலை, பா.ஜ.,வுக்கு வரவில்லை.
அதேசமயம், ஜெயலலிதாவிடம் கலந்தாலோசிக் காமல், பொறுப்பு கவர்னராக, வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார். மத்திய அரசின், இந்த முடிவையும் ஜெயலலிதா ஏற்றார். ஆனால், மத்திய அரசின், 'உதய்' மின் திட்டம், 'நீட்' நுழைவுத்தேர்வு, உணவு பாதுகாப்பு சட்டத்தை எதிர்ப்பதில், ஜெயலலிதா உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தார்.
அவரது மறைவுக்கு பின், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர், ராம்நாத் கோவிந்தை,
பல்வேறு கட்சிகள், தானாக முன்வந்து ஆதரித்தன. தினகரனும் வலிய சென்று, ஆதரவு அளித்தார். துணை முதல்வர், பன்னீர்செல்வத்திடம், பிரதமர் மோடி, தொலைபேசியில் ஆதரவு கேட்டார்.
ஜனாதிபதி தேர்தலில், 60 சதவீத ஓட்டுகளை பெற்று, பா.ஜ., வெற்றி பெற்றது. ஆனால், தற்போது, ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில், அரசியல் சூழல் மாறியுள்ளது. அதாவது, ராஜ்யசபாவில் மொத்தமுள்ள, 245 எம்.பி.,க்களில், பா.ஜ., 68; காங்., 51; அ.தி.மு.க., 13; திரிணமுல் காங்கிரஸ், 13; சமாஜ்வாதி, 13; தி.மு.க., நான்கு; தெலுங்கு தேசம், ஆறு; மார்க்சிஸ்ட், ஐந்து; சிவசேனா, மூன்று; தேசியவாத காங்கிரஸ், நான்கு; ராஷ்ட்ரீய ஜனதா, ஐந்து; ஆம்ஆத்மி, மூன்று என, 31 கட்சிகள் உள்ளன.
தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி போன்ற கட்சிகள் விலகியுள்ளன. சிவசேனா கட்சியும்,மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக, சுதந்திரமான விசாரணை குழு அமைக்க,உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதை யடுத்து, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவை நீக்கக்கோரி, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடுவிடம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த, 65 எம்.பி.,க் கள் கையொப்பமிட்டு, 'நோட்டீஸ்' வழங்கி உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து, காங்கிரஸ் ஆதரவுடன், பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக, பொது வேட்பாளரை நிறுத்தினால், பா.ஜ., வேட்பாளர் வெற்றிக்கு சிக்கல் ஏற்படலாம்.
எனவே, பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற, அ.தி.மு.க., ஆதரவு அவசியம்.இதுகுறித்து, பா.ஜ., மேலிடம், முதல்வர் பழனிசாமியிடம் பேச்சு நடத்தியுள்ளது. பா.ஜ., வேட்பாளரை ஆதரிப்பது குறித்த முடிவை, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் எடுக்க, முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தல், பா.ஜ., அணி; காங்., அணி; மாநில கட்சிகள் அணி என, தேசிய அளவில், புதுக் கூட்டணி உருவாவதற்கு அச்சாரமாக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.