
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் வழங்கியும் அதை செயல்படுத்தாமல், கடைசி நேரத்தில் ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கான விளக்கத்தை கேட்பது ஏன்? என மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. ஆனால், வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதலாக 2 வாரங்கள் அவகாசம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் நேற்்று முன்தினம் மத்திய அரசு திடீரென புதிய மனுவை தாக்கல் செய்தது. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அதிர்ச்சி அடைந்தன.
பின்னர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் அறிவுரைப்படி இந்த புதிய மனுவை அடுத்த சில மணி நேரங்களில் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்நிலையில், வரைவு செயல் திட்டத்துக்கு பதிலாக மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வரைவு செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக இதுவரை எடுத்துள்ள நடவடிகைகளின் விவரங்களை தொகுத்து, அதை மே 3ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அப்போது, வரைவு செயல் திட்டத்தை தயாரிக்க உச்ச நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடு போதாது என்றும், கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அன்றைய தினம் புதிய மனுவை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் மத்திய அரசு மீண்டும் அவகாசம் கேட்கப் போவது உறுதியாகியுள்ளது.
கர்நாடகாவில் தோற்றால் அடுத்த இலக்கு தமிழகம்?
கர்நாடக தேர்தலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் பாஜ தோற்கும் நிலை ஏற்பட்டால், அதன் அடுத்த இலக்கு தமிழகமாக தான் இருக்கும். தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது காவிரி நீர் பங்கீடு விவகாரம்தான். அதனால், வலுவான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதின் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்து காலூன்ற பாஜ முயற்சிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
கர்நாடக தேர்தலை காரணமாக காட்டும்
வரைவு செயல் திட்டத்தை உருவாக்க இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ள மத்திய அரசு, மீண்டும் கூடுதல் அவகாசம் கேட்பதற்கு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை காரணமாக காட்டும் என கருதப்படுகிறது. கர்நாடகாவில் மே 12ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. பதிவான வாக்குகள் மே 15ம் தேதி எண்ணப்படுகின்றன. தமிழகம், கர்நாடகாவை பொருத்தவரையில் காவிரி பிரச்னை மிகவும் உணர்ச்சிகரமானது. எனவே, தேர்தல் நேரத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்கும் என்று தெரிகிறது.