
பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மே மாதம் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று புதிய திட்டங்களைத் தொடக்கிவைத்தும், நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு மேடை அமைக்கும் பணிகள் கால்கோல் விழாவுடன் வெள்ளிக்கிழமை தொடங்கின.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சிறப்பு பூஜைக்குப் பின்னர் பந்தல்கால் நட்டு, மேடை அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து, அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பவானி சட்டப் பேரவைத் தொகுதியைச் சேர்ந்த 5 ஆயிரம் பயனாளிகளுக்கு மே 13-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், குடும்ப அட்டைகள், அரசின் நலத் திட்டங்களை வழங்குவதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தொடக்கியும் வைக்கிறார்.
பவானி, காலிங்கராயன் அணைக்கட்டில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபம், காலிங்கராயனின் முழு உருவ வெங்கலச் சிலையையும் திறந்துவைக்கிறார்.
இவ்விழாவில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், வெ.சரோஜா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பிர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.
கால்கோல் விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், கோபி கோட்டாட்சியர் எஸ்.கோவிந்தராஜ், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, துணைத் தலைவர் ஏ.ரவி, ஈகோ பிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், பவானி நகராட்சி முன்னாள் தலைவர் என்.ராஜேந்திரன், மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினர் ஏ.வரதராஜன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.சி.முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.