
தினகரன் அணியின் வெற்றிவேல் கருத்துக்கு, திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் பதிலளித்துள்ளார்.
தினகரன் – திவாகரன் இடையே உச்சகட்ட மோதல் நிலவி வருகிறது. தினகரன் கட்சி குறித்து, திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் அவ்வப்போது, ஃபேஸ்புக்கில் விமர்சித்து வருவார். இந்நிலையில், ஜெய்ஆனந்தின் பதிவுக்கு, தினகரன் அணியின் வெற்றிவேல் பதிலளித்து போட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு, அவர்களிடையே இருக்கும் மோதலை வெட்டவெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
``எங்கள் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கில், எங்கள் உணர்வைக் காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தைச் சார்ந்த திவாகரனும் ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது. தங்களின் சுயலாபத்துக்காகக் கழகத்தையும் எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதீர்கள்... நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களைக் குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்" என்று வெற்றிவேல் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜெய்ஆனந்த், ``உங்களின் பதிவு எங்களுக்குக் கோபத்தைத் தரவில்லை. மிகுந்த மனவருத்தத்தை தருகிறது. நாங்கள் எடப்பாடி அணியோடு மறைமுகமாக நெருக்கமாக இருக்கிறோம் என்று நீங்கள் கூறுவது தவறு. அண்மையில், கரூரிலிருந்து எங்கள் உறவினரை வேலூருக்கு மாற்றி பழிவாங்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறார் எடப்பாடி. இது நடந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அரசியலில் நாங்கள், உங்களுடன் பயணித்ததால்தானே, பா.ஜ.க, வருமானவரித்துறை மூலம் எங்களுக்கும், எங்களைச் சார்ந்தோருக்கும் இன்னல்களைக் கொடுத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா. 72 மணி நேரம் என் வீட்டில் சோதனை செய்து, என்னை அடிக்க வருவது போல பாவனை காட்டி, தவறான வாக்குமூலம் வாங்க நினைத்தது உங்களுக்குத் தெரியுமா?. என் நண்பர்களில் பலர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வங்கிக் கணக்குகள் எல்லாம் முடக்கப்பட்டன. தற்போதுவரை, நிலைமை சரியாகவில்லை. இதனால், அவர்களின் தொழில் முடங்கி வாழ்வதற்கு போராடும் அவலம் நீங்கள் அறிவீர்களா?. தியாகம் என்பது அனைவரிடத்தும் உள்ளது. அதைச் சொல்லிக்காட்ட நாங்கள் விரும்பவில்லை.
உங்கள் தியாகத்தை நாங்கள் கொச்சைப்படுத்தவில்லை. உங்களிடம் எந்தப் பதவியையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நானும், திவாகரன் அவர்களும், பொதுமேடையில் டி.டி.விதான் முதல்வர் என்று இன்றுவரை பேசிவருகிறோம். ஆனால், ஒரு சில விஷயங்களில் மாற்றுக் கருத்து இருப்பதை மறைக்கவும் இல்லை. நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது, ஒரு மனிதன், சக மனிதனுக்குக் கொடுக்கும் மரியாதை மட்டுமே. பல மாதங்களாக, மறைமுகமாக, நாங்கள் ஏராளமான இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறோம். யாரோ எழுதிய அறிக்கை உங்கள் பெயர்போட்டு வந்திருக்கிறது. உங்களது மனசாட்சிக்கு அது தெரியும் என நம்புகிறேன். திவாகரனின் தற்போதைய நிலைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
ஒரு குட்டிக் கதை சொல்கிறேன். 15 மற்றும் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ என்ற விஞ்ஞானி, பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்றார். ஆனால், கிறிஸ்துவ சமயத்தினர், சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது. பூமி நிற்கிறது என்று நம்பினர். அவர்களது நம்பிக்கைக்கு எதிராகப் பேசிய கலீலியோவைக் கற்களால் அடித்தனர். பிறகு, அவர் இறந்துவிட்டார். அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மை விஞ்ஞானபூர்வமாக நிரூபணமானது. அவர் இருக்கும்போது சொன்ன உண்மை, இறந்த பின்பு உலகம் அறிந்தது. ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் உண்ணும் இலையில் மலத்தை அள்ளி வைத்தால்கூட, அமைதி காப்போம் சின்னம்மா என்ற ஒற்றை வார்த்தைக்காக’’ என்று ஜெயானந்த் கூறியுள்ளார்.