
#KarnatakaElections2018 #INC4Karnataka #BJP4Karnataka #JDS4Karnataka பெல்லாரி நகரம் சட்டமன்ற தொகுதி
பெல்லாரி நகரம் சட்டமன்ற தொகுதியில் இளைஞர்களின் ஆதரவு பாஜகவுக்கு பெரும்பான்மையாக இருக்கிறது. இத்தொகுதியில் முக்கிய மற்றும் பிரபலமான நபராக பார்க்கப்படுபவர் ஸ்ரீராமுலு. அவர் கடந்த 2011ம் ஆண்டு தனது தலைவர்களில் ஒருவரான ஜி.ஜனார்த்தன ரெட்டியை அன்றைய பாஜக அரசு சிறையிலடைத்ததை கண்டித்து, பாஜகவில் இருந்து பிரிந்து செயல்பட்டார். இதனால் 2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி பிளவுப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய அனில் எச். லத் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் ஸ்ரீராமுலு துவக்கிய கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.முரளி கிருஷ்ணா டெப்பாசிட்டை தக்க வைத்துக்கொண்டார். பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட இத்தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதே ஆச்சரியமாக தான் பார்க்கப்பட்டது. பாஜக சார்பில் அத்தேர்தலில் போட்டியிட்ட ஜி.வி கவுடா வெறும் 5608 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். 2014ம் ஆண்டு பாஜக - ரெட்டி சகோதரர்கள் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட, மீண்டும் ஸ்ரீராமுலு பாஜகவில் இணைந்தார். இதனால் பாஜகவுக்கு இப்போது அங்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 35 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்தே காணப்படுகிறது. இத்தொகுதியில் தற்போது ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். அதேநேரம் காங்கிரஸ் சார்பில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அனில் எச் லத் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸுக்கான பாரம்பரிய வாக்குகள் அப்படியே கிடைக்கின்றது. 45 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் விவசாயிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். ஆனாலும் இளைஞர்களை கவர்வதில் காங்கிரஸ் அங்கு தோற்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் இக்பால் அகமத் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனாலும் அவருக்கான செல்வாக்கு அங்கு குறைவாக காணப்படுவதால் அவர் 10,000 வாக்குகளை கூட தாண்டுவது கடினமாக இருக்கும்.
பெல்லாரி நகரம் தொகுதியை பொருத்தவரை பாஜக உறுதியாக வெற்றி பெறுகிறது.

#KarnatakaElections2018 #INC4Karnataka #BJP4Karnataka #JDS4Karnataka பெல்லாரி (ST) சட்டமன்ற தொகுதி
இத்தொகுதியும் பாஜக ஆதிக்கம் கொண்ட தொகுதி என்றே சொல்லலாம். இதுநாள் வரை இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஸ்ரீராமுலு. தற்போது இவர் பாஜகவின் துணை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பதாமி தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்ற அவர், 2014ம் ஆண்டும் மீண்டும் பாஜகவில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக அவர் உள்ளார். அவரது விலகல் காரணமாக இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஸ்ரீராமுலுவின் செல்வாக்கு மட்டுமே பாஜகவுக்கு அங்கு கை கொடுத்து வந்த நிலையில், பாஜக சார்பில் புதிதாக ஓபலேஷ் என்பவர் களமிறக்கப்பட்டார். ஸ்ரீராமுலு இல்லை என்பதே அங்கு காங்கிரஸுக்கு அப்போது பெரும் வெற்றியை கொடுக்கும் என்றே கருதப்பட்டது. அதைப்போலவே இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது காங்கிரஸ். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட என்.ஓய் கோபாலகிருஷ்ணா அப்போது அங்கு வெற்றி பெற்றார்.
பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சன்னா பாகிரப்பாவிற்கு இங்கு போட்டியிட தற்போது சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் சார்பில் இத்தொகுதியில் நாகேந்திரா என்பவர் போட்டியிடுகிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தயான்னா என்பவர் போட்டியிடுகிறார். இங்கு பாஜகவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாக பார்க்கப்பட்டாலும், சன்னா பாகிரப்பாவின் குடும்பத்தினர் ஆதிக்கம் அரசியலில் இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இது பாஜகவுக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இளைஞர்கள், பட்டதாரிகள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாலும், காங்கிரஸுக்கும் இங்கு அவர்களின் வாக்குகள் பிளவுப்படுகின்றன. கடந்த 2013ம் ஆண்டு இளம் பெண் ஒருவரை கிண்டல் செய்தமைக்காக பாகிரப்பாவின் மகன் முத்து பாகிரப்பா சிறையில் அடைக்கப்பட்டதை கொண்டாடியதாக தெரிவிக்கும் மக்கள், தற்போது அவர் வென்றால் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்வி எழும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். இத்தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு துளி அளவிலும் ஆதரவு இல்லை என்பது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. சிறுதொழில் செய்வோர், முதியோர் மத்தியில் காங்கிரஸுக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளது.
இத்தொகுதியை பொருத்தவரை காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்பே அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

#KarnatakaElections2018 #INC4Karnataka #BJP4Karnataka #JDS4Karnataka பாதாமி சட்டமன்ற தொகுதி
பாதாமி தொகுதி தற்போது மிகவும் பிரபலமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் இங்கு தான் காங்கிரஸ் சார்பில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போட்டியிடுகிறார். அதேநேரம் பாஜக சார்பில் துணை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த பாதாமி தொகுதியை பொருத்தவரை குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு குடத்திற்கு ரூ. 150 வீதம், 4 குடத்திற்கு 450 ரூபாய் மற்றும் குடிநீர் கொண்டுவரும் வாகன செலவுக்கு ரூ. 50 என குடிநீருக்கு மட்டும் அங்குள்ள மக்கள் 500 ரூபாய் செலவு செய்கின்றனர். இதற்கு அடுத்ததாக கழிப்பிட வசதிகள் பெரும்பாலான கிராம பகுதிகளில் இல்லை. கிராம பகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே வாக்குகள் பிரிந்து செல்கின்றன. அதேநேரம் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் ஹனுமன்த்தா மணிவர்மராத்துக்கு நகர பகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. நகர பகுதிகளில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெரும் ஆதரவு இல்லை. ஆளும் அரசின் மீதும் அங்கு அதிருப்தி நிலவி வருகிறது.
அத்தோடு இத்தொகுதியின் நகர பகுதிகளிலும் குடிநீர் பிரச்சனை இருக்கிறது. அத்தோடு முதல்வர் சித்தராமையா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது நகர பகுதிகளில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. நகர பகுதிகளில் சிறுதொழில் செய்வோர், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவான நிலையே காணப்படுகிறது. பாஜகவுக்கு அடுத்த இடத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியையே அவர்கள் முன்னிருத்துகின்றனர். இதன் மூலம் பாதாமி தொகுதியில் காங்கிரஸ் தோல்வியை தழுவுவதோடு, பாஜகவின் கை இங்கும் ஓங்கி இருப்பதே வெளிப்படுகிறது. இத்தொகுதி மக்களிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், இங்கும் பாஜக வெல்வது உறுதியாகியுள்ளது. அதேநேரம் பிரதமர் மோடியின் பிரச்சாரம் இத்தொகுதியில் இன்னும் அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இப்போது வெற்றி கொண்டாட்டத்தில் இங்கு பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றே சொல்லவேண்டும்.
Survey reports by m.harish@spicknews