Breaking

அரசியல் தலையீடுகளால் சுயமாக செயல்பட முடியவில்லை! சொல்வது யார்?

நம்நாடு செய்திகள்
0
புதுடில்லி : 'ஜனநாயக ரீதியிலான அனைத்து வகை தேர்தல்களையும், நியாயமான, அரசியல் தலையீடற்ற முறையில் நடத்த, சட்டம் இயற்றும் அதிகாரம் தேவை' என, தேர்தல் கமிஷன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அரசியல் தலையீடு இல்லாமல், சுதந்திரமாக செயல்பட, தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்' எனக் கோரி, டில்லியில் வசிக்கும், பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர், அஷ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, தேர்தல் கமிஷனின் கருத்தை தெரிவிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் படி, தேர்தல் கமிஷன் சார்பில் நேற்று, தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் கமிஷன் நடைமுறைகள் குறித்த சட்டத்தில், திருத்தம் செய்யப்பட வேண்டும். 1998 முதல், இதை வலியுறுத்தி வருகிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய, பார்லிமென்ட், ஜனாதிபதி ஒப்புதல் தேவை. அதே நடைமுறை தான், தலைமை தேர்தல் கமிஷனர் பதவி நீக்கத்திலும் பின்பற்றப்படுகிறது.ஆனால், தேர்தல் கமிஷனர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு இல்லை.
தலைமை தேர்தல் கமிஷனர் நினைத்தால், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள, இரு தேர்தல் கமிஷனர்களையும் எந்த 

நேரத்திலும் பதவி நீக்கம் செய்யலாம். இதனால், தேர்தல் கமிஷனர்களின் பதவிக்கு பாதுகாப்பு இல்லை.
தலைமை தேர்தல் கமிஷனருக்கு இருப்பது போலவே, தேர்தல் கமிஷனர்களின் பதவிகளுக்கும் உரிய உத்தரவாதம் தேவை; அதை நடைமுறைப்படுத்த, சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் செயல்பட, தேர்தல் கமிஷனுக்கு, சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும்.
தேர்தல் கமிஷனுக்கான அதிகாரங்களை வரையறுப்பது குறித்து, 2004, 2005, 2010 மற்றும், 2012ம் ஆண்டுகளில், மத்திய அரசுக்கு பல பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். இறுதியாக, 2016ல், தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து, 47 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் நிறைவேற்ற, தேர்தல் கமிஷனுக்கென தனி செயலகம் அமைக்கப்பட வேண்டும்.
அதற்காக தனியாக நிதி ஒதுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் அளிப்பதன் மூலம், நாடு முழுவதும், அரசியல் தலையீடற்ற, நேர்மையான, ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்த முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை நடத்தும் அதிகாரம், தலைமை தேர்தல் கமிஷனுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் கமிஷனில், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களே, தேர்தல் தேதி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் முடிவு செய்கின்றனர்.


அரசியல் தலையீடு இருப்பது அம்பலம்!
தேர்தல் கமிஷன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவின் மூலம், தேர்தல் நடைமுறைகளில் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும், அங்கு ஆளுங்கட்சியின் ஆதிக்கமும், தேர்தல் நடைமுறைகளில், அவர்களின் தலையீடும் இருப்பதாக, எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவது வழக்கம்.
சில தொகுதிகளில், தனிப்பட்ட செல்வாக்கு உடைய, அரசியல் பிரமுகர்கள், சுயேச்சைகள், தேர்தல் அதிகாரிகளை மிரட்டியும், ஓட்டுச் சாவடி களை முற்றுகையிட்டும், பணம் வினியோகம் செய்தும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கின்றனர். ஜனநாயக ரீதியில் நடக்க வேண்டிய தேர்தல், பல இடங்களில், பணநாயக முறையில் நடப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
தற்போது, 'தேர்தல் கமிஷனுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் தேவை; அரசியல் தலையீடற்ற நியாயமான முறையில் தேர்தல் நடத்த தனி செயலகம் அமைக்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பதன் மூலம், தேர்தல் நடைமுறைகளில், அரசியல்வாதிகளின் ஆதிக்கம் இன்றும் தொடர்வது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)