
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்ககோரி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் பழனிசாமி இன்று நேரில் மனு அளித்தார்.
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். மேலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். அவருடன் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டு செல்லும் போது, பிரதமர் மோடியிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி முதல்வர் பழனிசாமி, மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இறுதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ஆறு வாரகாலங்களுக்குள் நடுவர் மன்ற உத்தரவுபடி அதற்கான திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். காவிரி நடுவர் மன்ற உத்தரவையும் உள்ளடக்கியே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் என்பது உச்ச நீதிமன்ற தீ்ர்ப்பில் உள்ளடங்கியதுதான்.
காவிரி டெல்டா விவசாயிகள் தங்கள் பகுதியில் விவசாயம் செய்ய காவிரி தண்ணீரை பெரிதும் நம்பியுள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உடனடியாக தேவையாக உள்ளது. அடுத்த காவிரி நீர்பாசன பருவம் ஜூன் 1ம் தேதி தொடங்க உள்ள நிலையில் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் ஆணையத்தையும் அமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.