
காவிரியில் தமிழக உரிமையை தாரை வார்த்து கொடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவாரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பேசினார்.
அப்போது, காவிரி ஆற்றில் கர்நாடகா பல்வேறு அணைகளை கட்டியபோது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காவிரி உரிமையை தாரை வார்த்து கொடுத்தவர் கருணாநிதி என்று குற்றம்சாட்டினார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அப்போது அழுத்தம் கொடுத்து இருந்தால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டு இருக்கும். காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
நேரத்துக்கு தகுந்தற்போல் நிறத்தை மாற்றிக்கொள்ளும் கட்சி அதிமுக இல்லை. விவசாயிகள் நலனுக்காக துரும்பைக் கூட திமுக கிள்ளிப் போடவில்லை என்றும் இந்த ஆண்டு பயிர்க்கடனாக 8 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்னையில் செய்த தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்கிறார். தமது அரசை தரக்குறைவாக விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தார். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலின் கனவு ஒரு போதும் பலிக்காது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் நீர் வீணாகாமல் தடுப்பதற்காக தடுப்பணை கட்டுவதற்காக ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுப்பப்பட்டு உள்ளது. காவிரிக்காக 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா பதவியேற்ற போதெல்லாம் காவிரிக்காக போராடினார் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.