Breaking

முதல்வருக்கெதிராக போராடும் சேலம்! "ஒரு பிடி மண் கூட தரமாட்டோம்" மக்கள் போராட்டத்தின் பின்னனி!

நம்நாடு செய்திகள்
0


“சேவை குரூப்ல இருக்குற எல்லாருக்கும் ஒரு செய்தி. நாளைக்கு காலையில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் விமான நிலையத்தைத் திறக்க வர்றாரு. ஏற்கெனவே நாம விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா, அரசாங்கம் அதை காதுல வாங்கிக்கல. அதனால நாளைக்கு என்ன பண்ணலாம்னு பேசி முடிவு செய்யப் போறோம். மக்கள் எல்லாரும் தும்பிப்பாடி பெரிய மாரியம்மன் கோயில் திடலுக்கு வந்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”



- இந்த ஒரு வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இருக்கும் கமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டிபுரம் என்று சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் மக்களைச் சென்றடைகிறது. இதன் விளைவாகக் கடந்த மார்ச் 24ஆம் தேதி இரவு தும்பிப்பாடி பெரிய மாரியம்மன் கோயில் திடலில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.

ஊர் பெரியவர்கள், போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். “நம்ம பூமிய கெடுக்க நம்ம ஊர்க்காரரே முயற்சி செஞ்சாலும் விட்ருவோமா? நாளைக்கு இங்க வர்ற முதலமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்டுவோமா?” - கிழவர் ஒருவர் கேட்டார். அந்த கிழவரின் ஆலோசனையை ஒட்டுமொத்த இளசுகளும் ஏற்றுக்கொண்டனர்.

கடந்த 25ஆம் தேதி காலை தனது சொந்த ஊரான சேலத்தில் விமான நிலையத்தைத் திறக்க வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கறுப்புக் கொடி காட்டுவதென்று அவரது மாவட்ட மக்களே முடிவெடுக்கின்றனர். இந்த முடிவும் அவர்களது வாட்ஸ்அப் குரூப்பில் பகிரப்படுகிறது. இந்த வாட்ஸ்அப் தகவல் சில நிமிடங்களில் பல்வேறு குரூப்புகளுக்குப் பயணித்து முதல்வரின் செயலாளர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்புக்கே வருகிறது.

அதன்பின் தகவல் சேலம் மாவட்டக் காவல் துறைக்கும், கலெக்டர் அலுவலகத்துக்கும் தெரியப்படுத்தப்பட, அன்று அதாவது மார்ச் 24ஆம் தேதி இரவே டிஎஸ்பி ஒருவர் தலைமையில் போலீஸார் மப்டியில் தும்பிப்பாடி பெரிய மாரியம்மன் கோயில் திடலுக்கு சென்றுவிட்டனர். அந்தக் கூட்டம் முடியும் முன்பே அங்கே சென்றவர்கள், “தயவு செஞ்சு முதலமைச்சருக்கு கறுப்புக் கொடியெல்லாம் காட்ட வேணாம். சொந்த ஊர்லயே கறுப்புக் கொடின்னா மானம் போயிடும். அதனால அந்த போராட்டத்தை கைவிட்ருங்க. வேணும்னா முதலமைச்சரைப் பார்த்து மனு கொடுங்க” என்று சொல்கிறார்கள்.

அதற்கு போராட்டக் குழுவினர், “சார்... நாங்க ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமினு அலையா அலைஞ்சி எத்தனையோ மனு கொடுத்துட்டோம். ஆனால், எதுவும் நடவடிக்கை இல்லை. இப்ப எங்க பூமியப் பறிக்க விளம்பரமும் கொடுத்துட்டாங்க. அதனால நாங்க சும்மா இருக்க முடியுமா? எங்க ஊர்க்காரர்தான். இருந்தாலும் சோத்துல மண்ணள்ளிப் போட்டா என்ன செய்ய?’’ என்றனர்.

கடைசியில் சமரசம் பேசி சேலம் வந்த முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட விடாமல் போராடி அந்தப் போராட்டத்தை நிறுத்தி வைத்தனர் போலீஸார்.

சார்... நாங்க அன்னிக்கே முதலமைச்சருக்கு கறுப்புக் கொடி காமிச்சிருப்போம். ஆனா, உங்களுக்காக விட்டோம். இனியும் கிராமங்களை அளக்குற நோக்கத்தோடு உள்ள வராதீங்க. தயவுசெஞ்சு இப்படியே திரும்பப் போயிடுங்க” என்று மக்கள் கூட்டாக குரல் எழுப்ப, ஒருகட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திரும்பிவிட்டனர்.

போராட்டக்கார்களிடம் ஒருவரான பொட்டிபுரம் கிராமம் சட்டூர் அர்ஜுனனிடம் பேசினோம்.

“ஏற்கனவே 1989ல இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டபோதே எங்கள் கிராமத்தில் இருந்துதான் நிலம் கொடுத்தோம். 160 ஏக்கருக்கு இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்போது ஏக்கருக்கு 28 ஆயிரம் கொடுத்தார்கள். நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை தருவதாகவும் கூறினார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இன்னும் அது தொடர்பாக பலர் போட்ட வழக்கே இன்னும் நீதிமன்றத்தில் முடியவில்லை. ஆனால், இப்போது மீண்டும் விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்த முயற்சிக்கின்றனர். ஒருபிடி மண்ணைக்கூட கொடுக்க விட மாட்டோம். ஏற்கெனவே கொடுத்த நிலத்தை எதற்காகப் பயன்படுத்தினார்கள், எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள் என்று நாங்கள் சுமார் ஐந்நூறு பேர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி கலெக்டரிடம் மனு கொடுக்க இருக்கிறோம்” என்றார்.

இதுபற்றி சேலம் மேற்கு மாவட்ட பாமக துணைச் செயலாளர் எஸ்.எஸ். பழனிசாமியிடம் பேசினோம்.

“பத்து வருசம் முன்னாடி நிலத்தைப் பிடிக்க வந்தாங்க, போராட்டம் நடத்தினோம், விட்டுட்டாங்க. இப்ப மறுபடியும் வந்துட்டாங்க. விமான நிலைய விரிவாக்கத்துக்காக அரசு எடுக்க முயற்சி பண்ணுற அத்தனை நிலமும் விவசாய நிலம்தான். 570 ஏக்கர் நிலம் எடுக்க முயற்சி பண்றாங்க. அதுல 10 ஏக்கர்தான் புறம்போக்கு. மத்த எல்லாம் விவசாய நிலம். அதுவும் ஏரிப்பாசனம். நெல், கரும்புனு வளமான பூமி. இது ஓமலூர் தொகுதிக்குள்ள வருது. அந்தச் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல்கிட்ட கேட்டோம். ‘இது முதல்வர் எடுக்குற நடவடிக்கைங்க. என்னால தலையிட முடியாதுனு சொல்றாரு. உண்மையிலேயே விமான நிலைய விரிவாக்கத்துக்குத்தான் எடுக்குறாங்களா? இல்லை கையாடல் பண்றதுக்காக எடுக்குறாங்களா? உண்மையிலேயே விமான நிலையத்துக்குத்தான் எடுக்குறாங்கன்னா... ஏக்கருக்கு 30 கோடி ரூபாய் கொடுப்போம்னு அறிவிக்க சொல்லுங்க.

உயிரே போனாலும் நிலத்தைக் கொடுக்க மாட்டோம். டிஆர்ஓ மூன்று மணி நேரம் நின்னுட்டுத் திரும்பிப் போயிட்டாரு. தன் சொந்த மாவட்ட மக்களை எடப்பாடி பழனிசாமி இப்படி வஞ்சிக்கக் கூடாது” என்று முடித்தார்.

இந்த நிலையில்தான் நேற்று விமான நிலைய விரிவாக்கத்துக்காகக் கிராம மக்கள் சேலம் கலெக்டரைச் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள்.

முதல்வர் இந்தப் பிரச்சினையில் மெத்தனம் காட்டினால் இந்தக் கிராமங்கள் அதைச் சார்ந்த குக்கிராமங்கள் என்று அத்தனை பேரும் எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டையோ, சென்னை வீட்டையோ முற்றுகையிடப் போவதாக அடுத்தகட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.



சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு விவசாயி நேற்று இரவு மரணம் அடைந்துவிட்டார்.



நேற்று பகலில் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்கச் சென்று வந்த விவசாயி கந்தசாமி, ‘ஏற்கனவே நாலு ஏக்கர் நிலத்தைக் கொடுத்தாச்சு. இப்ப இருக்கிற ஏழு ஏக்கரையும் புடுங்கப் போறாங்களா... விடக் கூடாதுய்யா’ என்று சொல்லியபடியேதான் வீட்டுக்கு வந்தார். வீட்டிலும் புலம்பியபடியே இருந்தவர் நேற்று இரவு ஒன்பது முப்பது மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டு அப்படியே இறந்துவிட்டார்.

நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் பொட்டியபுரம், காமலாபுரம், சிக்கனம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரண்டனர். அவர்கள் கையில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேள்விகள் கேட்டு மனுக்களை ஏந்தியிருந்தனர்.

அப்படி ஏந்தியிருந்தவர்களில் விவசாயி கந்தசாமியும் ஒருவர். அவரது மனுவில், ‘சேலம் விமான நிலையத்துக்காக 1989 ஆம் ஆண்டு நிலம் கொடுத்த மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்,மற்றும் அதன் தொடர்புடைய ஆவணங்களை, கோப்புகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோயிருந்தார். மேலும், 1989 ஆம் ஆண்டு சேலம் விமான நிலையத்துக்காக நிலம் இழந்தவர்கள் நஷ்ட ஈடு தொடர்பாக தொடுத்த வழக்குகளின் விபரத்தையும் கோரியிருந்தார்.



ஆனால் விவசாயிகளை கலெக்டர் அலுவகத்துக்குள்ளேயே விடாததால் திரண்டு வாசலில் கோஷம் எழுப்பினர். பின் சிலரை மட்டும் அழைத்து மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். அப்போதே ஏமாற்றத்துடன் சிக்கனம்பட்டியை ஒட்டிய தனது கொண்டையனூர் கிராமத்திலுள்ள வீட்டுக்கு வந்தார் கந்தசாமி. வந்தவர் இரவே மன உளைச்சலில் இறந்துவிட்டார்.

இதுபற்றி கந்தசாமியின் மனைவி கலைவாணி செய்தியாளர்களிடம் கதறினார். ‘ஏற்கனவே ஏரோ பிளேனுக்குனு நாலு ஏக்கர் காடு கொடுத்தாச்சு. இப்ப இருக்கிற ஏழு ஏக்கர் காட்டையும் எடுத்துடுவாங்களோனு நேத்து கலெக்டர் ஆபீஸ் போயிட்டு வந்ததுலேர்ந்து புலம்பிக்கிட்டே இருந்தார். நைட் ரெண்டு நிமிசத்துல போயிட்டாருங்க. இப்ப நான் பிள்ளைகளை வச்சிக்கிட்டு என்ன பண்றது? அவர் மாதிரியே போயிடறதா என்னன்னு தெரியலையே’’ என்று சோகத்தில் விம்மினார்.

உயிரே போனாலும் எங்க மண்ணை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் விவசாயி ஒருவரின் உயிரும் போய்விட்டது. இனியாவது முதல்வர் களமிறங்கி இந்த கிராமங்களுக்கு வரவேண்டும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பது சேலம் மாவட்ட மக்களின் மிகவும் முக்கியமான கோரிக்கையாகும்! ஆரா@Minnambalam.com

Post a Comment

0Comments

Post a Comment (0)