
'ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது’ என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்புக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். அப்போதைய ஓ.பி.எஸ் அணியில் 11 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். சசிகலா ஆதரவாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். ஆனால், அவரின் பக்கம் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்றும், அதனால் ஆட்சி அமைக்க முடியாதென்றும் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. இதையடுத்து, சட்டமன்றத்தில் பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் அணி வாக்களித்தது. அ.தி.மு.க-வில் இருந்துகொண்டு முதல்வருக்கு எதிராகச் செயல்பட்ட பன்னீர்செல்வம் அணியின் 11 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிகள் இணைந்தன. அதன்பின் தினகரன் அணி உருவானது. தினகரனுக்கு 19 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். 19 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று அப்போதைய பொறுப்பு ஆளுநரிடம் புகார் தெரிவித்தனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏவாகப் பதவி வகித்துக் கொண்டு இப்படிச் செய்வது சட்டவிரோதம் என்று அ.தி.மு.க கொறடா, சபாநாயகரிடம் தெரிவித்தார். இதையடுத்து, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களும், எதிர்க்கட்சியினரும் நீதிமன்றத்தை நாடினர். மேலும், 'ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டதால், அவர்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று வழக்கு தொடரப்பட்டது. தினகரன் தரப்பு மற்றும் தி.மு.க தரப்பு வழக்குகளைத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து முடித்து, 27-04-2018 (இன்று) பிற்பகல் 2.15 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில் ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக் கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு 'ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. சபாநாயகர் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தகுதிநீக்க உத்தரவிட முடியாது. சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சபாநாயகர் பாரபட்சமாக நடந்துகொள்ளும் போது, உயர் நீதிமன்றம் தலையிடலாம் என்ற தி.மு.க. தரப்பு வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
முன்னதாக இன்று காலை "தீர்ப்பின் முன்னோட்டம் " என்ற தலைப்பில் 11 Mla க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக "அரசுக்கு சாதகமான தீர்ப்பே வரும்" என்று பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு குறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ள முன்னாள் பத்திரிக்கையாளர் சுவாமிநாதன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் கருத்து இதோ உங்களுக்காக

ஓபி எஸ் அணியின் தகுதி நீக்க வழக்கு தள்ளுபடியாம் . சபாழ் .
இதில் தீமுகவின் அரைவேக்காட்டுத்தனம் தான் தெரிகிறது 18 ஆண்டுகள் ஒரு குற்ற வழக்கை நடத்தத் தெரிந்த தீமுகவிற்கு சட்ட சபையின் சட்டம் தெரியவில்லையா ? ஐம்பதாண்டு காலம் சபை நடத்தியவர்களுக்கு சபையின் விதிமுறைகள் தெரியவில்லையா ? சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரமுண்டு என்ற ஒரு சபாநாயகரை அரசியலமைப்பிற்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் தலையில் குட்டுவோமென்று உயர்நீதிமன்றம் சொன்னதே அப்போது சபை நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடவில்லையா ? ஆளும் கட்சி அமைச்சரவை தன்சின்னத்தில் , தன் கட்சியில் நின்று வெற்றிபெற்ற வேட்பாளர்களிடம் நம்பிக்கை வாக்கு கோரும் போது பேசாமல் அமைதியாக இருந்தால் , வாக்கு எண்ணிக்கையில் அவர்களின் வாக்கு இல்லையானால் அதை அதிமுக அரசு எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ? தன் மீது நம்பிக்கை இல்லையென்று தன் கட்சியிலேயே ஒரு சாரார் சொல்வதாகத்தானே எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாகத் தானே பொருள் கொள்ள வேண்டும் .தினகரன் அணிக்கு ஒரு மாதிரியாகவும் பன்னீர் அணிக்கு ஒரு மாதிரியாகவும் சபாநாயகர் உத்தரவிட முடியுமா ? இது அரசியலமைப்பு சட்டத்திற்கெதிரானது இல்லையா ? இதில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு தீர்வு சொல்லாமல் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது , சபாநாயகரின் தீர்ப்பே இறுதி ஆனது என்றால் ஏதோ உள் குத்து வேலை நடந்திருப்பதாகத் தானே அர்த்தம் . சபாழ் .... நீதிக்குத் தலைவணங்கு .