Breaking

தனிக்கட்சி: தினகரன் ஆலோசனை!

நம்நாடு செய்திகள்
0
குக்கர் சின்னம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், தனிக்கட்சி தொடங்குவது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தினகரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களுக்கு குக்கர் சின்னத்தையும் அதிமுக அம்மா அணி என்கிற பெயரையும் வழங்க வேண்டும் என்று தினகரன் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையில் "தனது அணிக்கு அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், அகில இந்திய எம்ஜிஆர் அம்மா முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் என்ற மூன்று பெயர்களில் ஏதேனும் ஒன்றை வழங்கி உத்தரவிடவேண்டும்" என்று தினகரன் கோரியிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் தினகரன் அணிக்குக் குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், தினகரன் கேட்டுள்ள பெயர்களின் ஒன்றை அவர்களுக்கு ஒதுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

தீர்ப்பு தங்கள் தரப்புக்கு சாதகமாக வழங்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 10) சென்னை அடையாறிலுள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். அதில் தேர்தல் ஆணையம் கொடுக்கும் கட்சிப் பெயரை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, கட்சியைப் பலப்படுத்துவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

“தினகரன் தனிக்கட்சி என பேசி வரும் சூழ்நிலையில், இன்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேலும், தங்க தமிழ்ச்செல்வனும் புறக்கணித்திருக்கிறார்களாம். ‘அதிமுகவை மீட்பதுதானே நம் நோக்கம். இப்போ எதுக்கு இன்னொரு கட்சி?’ என அவர்கள் இருவரும் கேட்டதாகவும் சொல்கிறார்கள். இருவரையும் சமாதானப்படுத்த வீட்டுக்கு அழைத்திருக்கிறார் தினகரன். ஆனால், இருவரும் இன்னும் தினகரன் வீட்டுக்குப் போகவில்லை.”

இதைத் தொடர்ந்து குக்கர் சின்னத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி-பன்னீர் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டால், அதில் தங்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தினகரன் தரப்பிலிருந்து கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)