Breaking

திணறும் தமிழக அரசு! தத்தளிக்கும் தமிழர்கள் வாழ்வு!

நம்நாடு செய்திகள்
0


தேவிபாரதி

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சொன்னதைத் தமிழக அரசியல் கட்சிகள் சீரியசாக எடுத்துக்கொண்டிருக்கின்றன. வெற்றிடத்தை நிரப்புவதற்கு எல்லோருமே தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிந்தைய கற்பனைகளிலிருந்து விடுபட்டு தமக்கான அரசியல் அடையாளங்களைக் கண்டடைய முயன்றுகொண்டிருக்கிறார்கள். தமிழகத்தைக் காவிமயமாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சங் பரிவார அமைப்புகளின் திட்டங்களை முறியடிக்க திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் பராம்பரியமான அடையாளங்களை மீட்டெடுக்கப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் செப்படி வித்தைகளின் மூலம் சசிகலா, தினகரன் அணியிடமிருந்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை விதியின் கைகளில் ஒப்படைத்துவிட்டுத் தங்கள் அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் அம்மாவின் ஆட்சியை அதன் முழு ஆயுள்வரை நீட்டிக்கச் செய்வதும் அம்மாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் தினகரனிடமிருந்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்வதும்தான் தற்போதைக்கு அந்தக் கட்சிக்கு வரலாற்றுக் கடமை.

அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு அவர்கள் அடிக்கடி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்கிறார்கள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். தினகரனும் அவரது ஆதரவாளர்களும் கட்சிக்கு உரிமை கோருவதை மறுக்க நீதிமன்றங்களின் வாசல்களில் கால்கடுக்க நின்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். நீதிபதிகளின் விமர்சனங்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்களது வாரிசுரிமையை நிலைநாட்டுவதற்கான ஆவணங்களையும் சான்றுகளையும் திரட்டி அவற்றை லாரிகளில் ஏற்றிக்கொண்டு போய் தேர்தல் ஆணையத்தின் கிடங்குகளில் குவித்து வைக்கிறார்கள். கட்சியின் எதிர்காலம் சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது.

இறுதித் தீர்ப்பு நாளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும் ஒருவர் தோளை ஒருவர் ஆதரவாகப் பற்றிக்கொண்டு நல்லது நடக்கும் என்னும் எதிர்பார்ப்புகளுடன் மேடைகளில் தோன்றி புன்னகைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். அம்மாவின் அரசு என்பதால் அம்மாவின் கனவுகளை நிறைவேற்றுபவர்களாகத் தங்களையும் தங்கள் அரசையும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். 2016 தேர்தலின்போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏதாவது செய்ய முயல்கிறார்கள். தேர்தலின்போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பணிபுரியும் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்குவதன் மூலமும் ஜெயலலிதாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி முதலான இலவசத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தங்கள் வாரிசுரிமையைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார்கள்.

மலைக்க வைக்கும் நெருக்கடிகள்

குறைந்தபட்சம் இன்னும் மூன்றாண்டுகளுக்கு - 2021 மே வரை - நீடித்திருக்க வேண்டிய ஓர் அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளை நிறைவேற்றுவதற்கு அரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா என எழுந்துள்ள கேள்விகளை எதிர்கொள்ள அவர்களுக்கு அவகாசமில்லை. சென்ற வாரம் தனது எட்டாவது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பன்னீர்செல்வம் அரசின் கடன் சுமை மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டியபோது எல்லோருமே அதிர்ச்சியில் வாயடைத்துப்போனார்கள். கடந்த வருடங்களில் அரசு தன் முக்கிய வருவாய் ஆதாரங்களாகக் கொண்டிருந்த மதுபான விற்பனை, மணல் விற்பனை ஆகியவற்றுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நீதிமன்ற ஆணைகளைக் கடக்க முடியாத அரசு பத்திரப் பதிவு நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலமும் பேருந்து, மின்கட்டணங்களை உயர்த்தியதன் மூலமும் நிலைமையைச் சமாளிக்க முயன்றுவருகிறது. மைய அரசு மானியங்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாகத் தங்கள் அம்மா அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு திணறிக்கொண்டிருக்கிறது.

அதிமுக அரசால் தடையற்ற மின் விநியோகத்தை அளிக்க முடிந்திருந்தாலும் மின் வாரியம் தாள முடியாத கடன் சுமையில் சிக்கிக்கொண்டிருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. நஷ்டத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் போக்குவரத்துத் துறையால் தனது பணியாளர்களின் ஓய்வூதியப் பயன்களைக்கூட ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை. அவர்களது போராட்டங்களை எதிர்கொள்ள அரசு நீதிமன்றங்களின் தயவை நாட வேண்டியிருந்தது.

சுகாதாரமும் கல்வியும்

கல்வி, சுகாதாரம் சார்ந்த துறைகளில் சில உருப்படியான மாற்றங்களைக் கொண்டுவர அரசு முயன்றுவருகிறது. ஆனால், அந்தத் துறைகளில் அரசு பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம். கடந்த இருபதாண்டுகளில் உலகளாவிய அளவில் மேற்கண்ட துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக அதிகாரத்திலிருந்த திமுக, அதிமுக அரசுகளால் அதிகமும் கவனத்தில்கொள்ள முடிந்ததில்லை. அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலன்கள் கிராமப்புற மக்களை எட்டவே இல்லை. அடித்தட்டு மக்களின் மருத்துவம், சுகாதாரம் சார்ந்த தேவைகளுக்கு அரசு மருத்துவமனைகளைச் சார்ந்திருக்க முடியாத பரிதாபகரமான நிலையைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் அரசு நடத்தும் சாதனை விளக்கக் கூட்டங்களால் என்ன பயன் இருக்க முடியும்?

இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்குக் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றை ஒழுங்காக நடைமுறைப்படுத்துவதற்குரிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. அரசின் பல்வேறு துறைகளிலும் புரையோடிப் போயிருக்கிற ஊழல், முறைகேடுகளைக் களைவதற்கும் அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் அரசிடம் திட்டம் எதுவும் இருப்பதுபோல் தோன்றவில்லை.

கல்வித் துறையின் நிலை இன்னும் மோசம். எடப்பாடி அரசு பொறுப்பேற்றுக்கொண்டவுடன் கடந்த பத்தாண்டுகளில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி நேர்மையான அதிகாரியாகப் பெயரெடுத்திருந்த உதயச்சந்திரனை கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமித்தபோது அந்தத் துறையின் வளர்ச்சிக்கான விதை ஊன்றப்பட்டதாகக் கல்வியாளர்களில் பலருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இரண்டே மாதங்களில் அந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்டது. அவசர அவசரமாகப் பாடத் திட்டங்களை மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கியது அரசு.

பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, வகுப்பறைகள், கழிப்பிடங்களின் தரத்தை உயர்த்துவது, பள்ளிகளில் நூலகங்களை உருவாக்குவதன் மூலம் மாணவர்களின் வாசிப்புத் தரத்தை உயர்த்துவது, கற்றல், கற்பித்தல் முறையில் தேவையான மாற்றங்களை உருவாக்கி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது எனக் கல்வித் துறையின் அடிப்படையான தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களை உருவாக்குவதைப் பற்றிச் சிந்திக்காமல் கண்மூடிக் கண் திறப்பதற்குள் மாணவர்களை நீட் உள்ளிட்ட எல்லா வகையான தகுதித் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்குத் தயார்படுத்தப்போவதாக அரசு வெறுமனே கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது.

விவசாயம் என்னும் பெரும் பிரச்சினை

கடந்த சில ஆண்டுகளாகவே அதிக நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மானியங்கள், கடன் தள்ளுபடிகளைத் தவிர்த்து அரசிடம் வேறு ஏதாவது திட்டம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை. மைய அரசின் வளர்ச்சித் திட்டங்களால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களைப் பொருட்படுத்தாதன் விளைவாக அரசு விவசாயிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. நெடுவாசல், கதிராமங்களம், திருப்பூர் சாய ஆலைக் கழிவுகளால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நொய்யல் பகுதி விவசாயிகள் என முடிவேயில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் போராட்டங்களை அரசு பல வருடங்களாகப் புறக்கணித்து வந்திருப்பதோடு போராடும் விவசாயிகளை ஒடுக்கவும் முயன்று வருகிறது.

காலத்தின் தேவையை உணர்ந்து செயல்படுவதற்கு அம்மாவின் அரசின் முன் பல நெருக்கடிகள் இருக்கின்றன. அதை எதிர்கொள்வதற்கான திராணியற்ற நிலையில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் கட்சியில் தங்கள் வாரிசுரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் தர்ம யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி - பன்னீர் இணை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜகவைச் சார்ந்திருக்கிறது என்னும் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்துவிட முடியாதபடிதான் நிலைமை இருக்கிறது.

devibharathi.n@gmail.com @minnambalam.com

Post a Comment

0Comments

Post a Comment (0)