இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து கருத்து தெரிவித்த இளையராஜா மீது சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து கருத்து கூறியிருந்தார். இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைக் கேலி செய்வதாகும், அவமானப்படுத்துவதாகும் என்று சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர், இளையராஜா வீட்டு முன்பு நேற்று முன்தினம் (மார்ச் 25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இளையராஜா மீது இன்று (மார்ச் 27) சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க பொதுச் செயலாளர் தயாநிதி, "இயேசு கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்தார் என்பது உலகமெங்கும் உள்ள கிறித்தவர்களின் நம்பிக்கை. இன்னும் சில தினங்களில் இயேசு உயிர்தெழுந்த நாள் உலகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் இளையராஜா, இயேசு உயிர்ந்தெழுந்ததைக் கொச்சைப்படுத்திக் கருத்து தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத உணர்வைப் புண்படுத்தும் விதத்தில் பேசிய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இளையராஜாவின் இந்தக் கருத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் இது வேறொரு நிலையிலும் பயணிக்கத் தொடங்கியுள்ளது. 'இந்துத்துவம் வேகமாக எதிர்வினை புரிந்துவருவதை எதிர்த்துப் போராடிவரும் நிலையில் கிறித்தவ மற்றும் இசுலாமிய மத அடிப்படைவாதமும் வேறு பரிமாணம் எடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கும் நாம் எந்த வகையிலும் இடமளிக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்' என்ற ரீதியில் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதில் முக்கியமான ஒன்றாக எழுத்தாளர் சாரு நிவேதிதா மற்றும் தாமரையின் பதிவைக் கருதலாம். இவர்கள் இருவரும் இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அதே வேளையில் கிறித்தவ மற்றும் இசுலாமிய மத அடிப்படைவாதத்தையும் எதிர்த்துத் தங்கள் கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கின்றனர்.
ரமணரா? இயேசுவா? இசைஞாணி கொழுத்திப் போட்ட தீயினால் தனியுமா ஸ்டெர்லைட் போராட்டம்?
3/27/2018 09:18:00 PM
0
Tags