
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை 44 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ப்ளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ப்ளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 7ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 21ஆம் தேதி முதல் பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிகள் தொடங்கவுள்ளன. ஆனால் அன்று வார இறுதி நாளாக இருப்பதால் சனி, ஞாயிறு சேர்த்து கோடை விடுமுறையை ஜூன் 3ஆம் தேதி வரை நீட்டிக்க அதிகாரிகள் ஆலோசித்துவருகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்படும்.
வழக்கமாகப் பள்ளி மாணவர்களுக்கு 31 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கவுள்ளது.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் 220 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். 10ஆம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரையிலான உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 210 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரையும் மற்ற மாணவர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரையும் வகுப்புகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தொடக்கப் பள்ளி வேலை நாட்களை 220 நாட்களிலிருந்து 210 நாட்களாகத் தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால் கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
2017ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்தன. கடும் வெயில் காரணமாக ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.