Breaking

ஒரு பொம்மலாட்டம் நடக்குது!

நம்நாடு செய்திகள்
0

இன்றும் ‘அம்மாவின் அரசு’ என்று ஒவ்வொரு நான்கு வார்த்தைகளுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதே அம்மாவின் நீட் தொடர்பான, பாளையங்கோட்டை பிரகடனத்தை நினைத்துப் பார்த்திருந்தார்கள் என்றால், தமிழகம் நீட் எதிர்ப்புக்களத்தில் நெருப்பாற்றில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
நீட் தேர்வுக்கு எதிராக 2016-17ஆம் ஆண்டில் விலக்கு பெற்றது தமிழகம். அதேபோல் அல்லது அதைவிட சட்ட வலிமை அதிகமாக இந்த வருடமும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று தமிழகம் முழுக்கவும் போராடியது.
தமிழக அரசும் சேர்ந்து போராடியது என்றாலும்... அதிகாரம் என்னும் ஆயுதமில்லாத எதிர்க்கட்சிகள், மக்கள் சாலையில் போராடுகின்றனர். அதிகாரம் உள்ள தமிழக அரசு ஏன் போராடவில்லை என்பதே நீட் தேர்வு கேள்விகளைவிட விடை கண்டுபிடிக்க முடியாத கடினமான கேள்வி.
ஆனால், இந்தக் கேள்விக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய அடுத்தடுத்த முதல்வர்களின் டெல்லி விசுவாசம் என்பதே பதிலாக பிற்பாடு கிடைத்துவிட்டது.
இந்த இடத்தில் நாம் ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரி பரந்தாமனின் வலிமை மிகுந்த வார்த்தைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.
‘1976ஆம் ஆண்டு அவசரநிலைக்கு முன்பு கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்போது கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளும் மாநில அரசுகளின் கையில் இருந்தன. ஆனால், 76க்குப் பிறகு கல்வி, மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்துதான் கல்வித்துறையில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகமானதற்குக் காரணம். நாம் மீண்டும் போராடி... கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அது நீண்ட கால லட்சியம். அது உடனடி சாத்தியம் அல்ல. ஏனென்றால், அதற்கு அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். ஆனால், கல்விப் பொதுப் பட்டியலிலே இருந்தால்கூட அதிலேயே நாம் சாதிக்க முடியும்’ என்கிறார் ஹரி பரந்தாமன்.
எப்படி?
அதாவது கடந்த 1-2-17 அன்று... அதாவது கடந்த பிப்ரவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நீட் விலக்குச் சட்டம் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு மே மாதம்தான் நீட் தேர்வே நடந்தது. இந்தச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தால் இந்தப் பிரச்னையே வரப்போவதில்லை.
ஆனால், பிப்ரவரி மாதம் இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய ஓ.பன்னீர் அரசாகட்டும், அதையடுத்து கட்சிக்குள் ஏற்பட்ட அணி பிளவுகளால் ஆட்சிக்கு வந்த எடப்பாடி அரசாகட்டும்... பிப்ரவரி 1ஆம் தேதி தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தச் சட்டத்துக்கு ஏன் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவில்லை?
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே மாதம் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, ‘நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்திற்குள் முதன்முதலாக நுழையும்போது கீழே விழுந்து கும்பிட்டு ஜனநாயகத்தின் கோயில் என்று சொன்ன பிரதமர் மோடி... சட்டமன்றத்தை என்ன நினைத்தார்? தமிழகச் சட்டமன்றத்தின் தீர்மானத்தை என்னவாக மதித்தார்?

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டம் ஏன் குடியரசுத் தலைவரின் அலுவலகத்துக்கே அனுப்பப்படவில்லை?
2017 மார்ச் மாதம் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நட்டாவைச் சந்தித்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது, தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க முடியாது. தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் நட்டா, விஜயபாஸ்கரிடம் கூறினார்.
அதன் பிறகாவது தமிழகச் சட்டமன்றத்தின் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஏன் எடப்பாடி அரசு முயற்சி எடுக்கவில்லை?
கடந்த பிப்ரவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் நீட்டுக்கு முழுமையான விலக்கு கோரவில்லை. அதை உற்று கவனித்தால் புரியும். இதைக்கூட தமிழக அரசு மத்திய அரசுக்குப் புரியவைக்கவில்லை! காரணம் என்ன?
நீட் வேண்டும் என்று டெல்லி முடிவெடுத்துவிட்டது. வேண்டாம் என்று ஏன் தமிழ்நாடு முடிவெடுக்கவில்லை?
(அடுத்த ஆட்டம் வெள்ளியன்று)

Post a Comment

0Comments

Post a Comment (0)