சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை முதல்வர் பதவியிலிருந்து விலகச் சொன்னதும் யுத்தத்தைத் தொடங்கினார் பன்னீர். அதிமுகவில் பிளவு அங்கேதான் ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைத் தேடிப் போனவர்கள்கூட, அப்படியே பன்னீர் வீட்டுப் பக்கம் ஒதுங்க ஆரம்பித்தார்கள். சசிகலா எதிர்ப்பு என்பதுதான் பன்னீரின் ப்ளஸ். அதை வைத்துதான் அவர் அரசியல் காய் நகர்த்தலைத் தொடங்கினார். சசிகலாவே தெய்வம் எனச் சொல்லிவந்த எடப்பாடி அணியையும் ஒரு கட்டத்தில் சசிகலாவை எதிர்க்கவைத்த பெருமை பன்னீருக்கே சாரும்.
ஆனால், இப்போது பன்னீர் சொல்வது எதையும் எடப்பாடி கேட்பதில்லை என்ற கோபமும் வருத்தமும் அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நிறையவே இருக்கிறது. முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவுக்கு பன்னீர் அழைக்கப்பட்டாலும் அவரை ஒரு அமைச்சர் லெவலுக்கு மட்டுமே மதிக்கிறார் பழனிசாமி. துணை முதல்வர் என்ற சிறப்பு கௌரவம் எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவே இல்லை.
தலைமைச் செயலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் எதற்கும் பன்னீரை அழைப்பதும் இல்லை. பன்னீரின் துறையில் உள்ள ஃபைல்கள்கூட, எடப்பாடி சொல்லாமல் நகர்வதில்லை. அந்த அளவுக்கு பன்னீருக்கு செக் வைத்திருக்கிறார் எடப்பாடி. இதெல்லாம் பன்னீரை ரொம்பவே வருத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. டெல்லி சென்ற சமயத்தில், பிரதமரிடமே இது சம்பந்தமாக பன்னீர் பேசியும் இருக்கிறார். ஆனாலும் எதுவும் மாறவில்லை. வருத்தங்களும் குறையவில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் இரவு பன்னீருக்கு மிகவும் நெருக்கமான ஒருவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவர். ‘அண்ணன்கிட்ட தலைவர் பேசச் சொன்னாரு...’ என்று சொல்ல... அவருடைய செல்போனிலிருந்து பன்னீருக்கு நெருக்கமான ஒருவரது செல்லுக்கு கால் போயிருக்கிறது. விவரம் சொல்லப்பட...போன் பன்னீர் கைக்கு மாறியிருக்கிறது.
‘தலைவர் உங்ககிட்ட பேசச் சொன்னாரு. அவரு மனதார உங்களுக்கு எந்த கெடுதலும் செஞ்சது இல்லை. நீங்க முதல்வராக இருக்கணும் என ஆரம்பத்துல அம்மாகிட்ட சொன்னதே தலைவர்தான். அப்படிப்பட்டவரை நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க.
இப்போ உங்களுக்கு அங்கே என்ன மரியாதை கொடுக்கிறாங்கன்னு எங்களுக்கு தெரியும். தலைவரோ, சின்னம்மாவோ உங்களை ஒரு நாளாவது இப்படி நடத்தி இருப்பாங்களா? உங்களை எப்பவுமே தலைவர் விரோதியா நினைச்சது இல்லை. அம்மா இல்லை என்றதும் சின்னம்மா உங்களைத்தானே முதல்வராக உட்கார வெச்சாங்க. அதை நீங்க யோசிச்சு பாருங்க.
தலைவருக்கு இப்போ கோபமே எடப்பாடி மேலத்தான். உங்க மேல அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்க நேருக்கு நேராக எதிர்த்து நின்றவரு... எடப்பாடி முதுகில் குத்திட்டாருன்னு தலைவர் அடிக்கடி சொல்லுவாரு. இப்போ எங்களுக்கும் எதிரி எடப்பாடிதான். எங்க நோக்கம் ஆட்சியை கலைக்கிறது இல்லை. ஆனால், எடப்பாடி முதல்வராகத் தொடரக் கூடாது. நீங்க முதல்வராக இருந்தால்கூட எங்களுக்கு சந்தோஷம்தான். நீங்க முதல்வராக எந்த உதவி என்றாலும் நாங்க செய்யத் தயாரா இருக்கோம். அதைத்தான் தலைவர் உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு...’ என்று பேசியிருக்கிறார் அந்த எம்.எல்.ஏ. ‘இது சம்பந்தமா போனில் எதுவும் பேச வேண்டாம்... நான் பேசுறேன்.’ என்று மட்டும் பட்டும் படாமல் சொல்லி போனை வைத்துவிட்டாராம் பன்னீர்.
பன்னீர் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் அண்மையில் டெல்லி போயிருந்தார். அப்போது, தினகரன் ஆதரவு எம்.பி. ஒருவர் டெல்லியில் வைத்தும் இது சம்பந்தமாக பேசி இருக்கிறார். ‘நான் அண்ணனோடு கலந்து பேசிட்டு சொல்றேன்’ என்று மட்டும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் அந்த முன்னாள் அமைச்சர். இப்படியாக தினகரன் டீம் நாலு பக்கம் இருந்தும் பன்னீர் அணியில் உள்ளவர்களுக்கு நூல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்”
Post a Comment
0Comments