தமிழகத்தில் பாஜகவுக்கு முகவரி கொடுத்ததே அதிமுகதான்’ என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை பாஜகதான் கட்டுப்படுத்துகிறது என்று தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் குற்றம்சாட்டி வந்த நிலையில், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நிறைய நிதிகள் கிடைக்கும் என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இல்லை என்றும் தமிழக ஆட்சியாளர்கள் பேசி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் இரட்டை இலை தொடர்பான விசாரணை இன்று (அக்டோபர் 23) டெல்லியில் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ள நேற்று டெல்லி சென்ற ஒருங்கிணைந்த அதிமுக அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, “மெர்சல் குறித்து ஆர்வக்கோளாறில் தமிழக பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் மெர்சல் பற்றி கூறினாரா என்ன? எனவே, பிரதமர் மோடியை மெர்சல் விவகாரத்தில் தொடர்புபடுத்த வேண்டாம்.
பாஜகவுக்குத் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தவர் ஜெயலலிதாதான். மேலும் பாமக, மதிமுகவுக்கும் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது அதிமுகதான். எனவே தமிழகத்தில் அதிமுகவை வேறு எந்த கட்சியோ, அதன் தலைவரோ காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை.
பிரதமர் மோடி தங்களைக் காப்பாற்றுவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுக்கு தந்தை எம்.ஜி.ஆர்., தாய் ஜெயலலிதா” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
0Comments