Breaking

கைரேகை இறந்த பிறகு எடுக்கப்பட்டதா?

நம்நாடு செய்திகள்
0
- உயர் நீதிமன்றத்தில் டாக்டர் பாலாஜியின் வாக்குமூலம்

கடந்த வருடம் நவம்பர் 19ஆம் தேதி நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், தஞ்சை, அரவக்குறிச்சி, பாண்டிச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதிக்கான மறுதேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா கையெழுத்துக்குப் பதில் கைரேகை வைத்தார். இது அப்போதே சர்ச்சையாகி இன்றும் அந்த சர்ச்சை நீடித்து வருகிறது.

திருப்பரங்குன்றம் தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மிக முக்கியமான கட்டமாக, அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையை வேட்புமனு படிவத்தில் பதிவு செய்த டாக்டர் பாலாஜி நேற்று (அக்டோபர் 27) பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் ஆஜர் ஆனார்.

அவரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டி திமுக வேட்பாளர் சரவணன் கோரிய மனுவை ஏற்று, டாக்டர் பாலாஜி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது டாக்டர் பாலாஜியிடம், ஜெ. கைரேகை தொடர்பாக திமுக வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தார். நூறுக்கும் குறையாமல் திமுக வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் தொடுத்த கேள்விகளுக்குச் சுமார் இரண்டை மணி நேரமாக பதிலளித்தார் டாக்டர் பாலாஜி.

அந்த குறுக்கு விசாரணையின் முக்கிய பகுதிகளை #என்நாடு வாசகர்களுக்காகத் தொகுத்துத் தந்திருக்கிறோம். கீழே திமுக வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்க, அதற்கு டாக்டர் பாலாஜி கொடுத்த பதில் தொகுக்கப்பட்டுள்ளது.

* ஜெயலலிதாவைச் சந்தித்து கைரேகை பதிவு செய்வதற்கு தமிழக அரசிடமிருந்து உங்களுக்கு அதிகாரபூர்வ அனுமதி வழங்கப்பட்டதா?

இல்லை.

* ஜெயலலிதாவிடம் 20 கைரேகைகள்தானே வாங்கியிருக்க வேண்டும். அந்த படிவங்களுக்குத் தேவையானவை இருபது கை ரேகைள்தான். ஆனால், நீங்கள் 28 கைரேகைகள் வாங்கியிருக்கிறீர்களே?

ஆமாம் ஜெயலிதாவிடம் 28 கைரேகைகள் வாங்கினேன்.

* அந்த 28 கைரேகைகளுக்கும் அட்டெஸ்டேஷன் (சான்றாவணம்) போடாமல் வேட்புமனுவில் வைக்கப்பட்ட கைரேகைக்கு மட்டும்தான் அட்டெஸ்டேஷன் கையொப்பம் போட்டிருக்கிறீர்களா?

இல்லை. எல்லா கைரேகைகளுக்கும் சேர்த்து நான் ஒரே அட்டெஸ்டேஷன்தான் போட்டிருக்கிறேன்.

* மீதி படிவங்கள் எல்லாம் என்ன ஆனது?

அவை எங்கே என்று தெரியவில்லை.

* ஜெயலலிதாவை நீங்கள் பார்த்தபோது அங்கே யார் இருந்தார்கள்? ஓ.பன்னீர், சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி யாராவது அங்கே இருந்தார்களா?

அங்கே ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் சசிகலா மட்டுமே நின்று கொண்டிருந்தார். வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.

* உங்கள் முன்னால் ஜெயலலிதாவிடம் கைரேகைகளை அந்த படிவங்களில் வாங்கியது யார்?

அதை யார் வாங்கினார்கள் என்று எனக்குத் தெரியாது.

* சரி கைரேகை பெற்ற படிவங்களை யாரிடம் கொடுத்தீர்கள்?

அதை நான் அப்போலோ மருத்துவர்களிடமே கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

* நீங்கள்தான் ஜெயலலிதாவைச் சந்தித்து கைரேகை பெற்றதாக

சொல்கிறீர்கள். நீங்கள் ஜெயலலிதாவை சென்று பார்த்ததற்கு புகைப்படமோ, வீடியோவோ எடுக்கப்பட்டதா? அல்லது ஜெயலலிதாவின் மருத்துவமனை லாக் ஷீட்டில் குறிப்பு இருக்கிறதா? அல்லது அப்போலோ மருத்துவமனை இதற்காக உங்களுக்கு வழங்கிய ஆவணம் எதுவும் இருக்கிறதா?

அப்படியெல்லாம் என்னிடம் எதுவும் இல்லை.

* அப்படியானால்... நீங்கள் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லை. அதனால்தான் அதற்கான எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை. நீங்கள் உள்ளே போகவே இல்லை. நீங்கள் போயிருந்தால் உங்களால் ஆவணத்தைக் கொடுத்திருக்க முடியுமே. ஆக... அடையாறில் உங்கள் சகோதரியின் பெயரில் இருக்கும் நர்சிங் ஹோமுக்கு வந்து உங்களிடம் இந்த கைரேகை படிவத்தில் கையெழுத்து வாங்கிப் போயிருக்கிறார்கள் அல்லவா?

இல்லை இல்லை நான் அப்போலோ மருத்துவமனையில் இருந்துதான் கையெழுத்திட்டேன்.

* ஜெயலலிதா நுரையீரல் செயல்பட முடியாத நிலையில் மிக மோசமான சுவாசக்கோளாறில் இருந்தாரா?’

ஆமாம். இருந்தார்.

* இந்தப் பிரச்னைக்காக அவர் வெண்டிலேஷனில் வைக்கப்பட்டிருந்தாரா, சுவாசக் கோளாறுக்காக அவருக்கு தொண்டை துளை குழாய் அறுவை சிகிச்சையான டிரக்யாஸ்டமி செய்யப்பட்டிருந்ததா?

ஆம். வெண்டிலேஷனில்தான் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு டிரக்யாஸ்டமி செய்யப்பட்டிருந்தது.

* ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்வதற்கு நான்கு அரசு மருத்துவர்கள் மறுத்த நிலையில்... நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்குக் காரணமே தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஆக உங்களை நியமிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதுதான். அப்போது இருந்த தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவுடன் இதுபற்றி நீங்கள் ரகசிய உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் கைரேகையை பதிவு செய்தீர்களா?

இல்லை... எனக்கு அந்தப் பதவி இயல்பாகத்தான் வழங்கப்பட்டது.

* சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் தாங்கள் நெருக்கமாக இருந்ததால் இந்தப் பதவி நியமனத்துக்கு வேண்டிய வரைமுறைகள் எல்லாம் மீறப்பட்டு உங்களுக்காக வழங்கப்பட்டது என்பது சரியா?

இல்லை.

* பாபு ஆபிரகாம் என்பவர் உங்கள் முன்னால்தான் கைரேகை பதிவுக்கு சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார். அவர் உங்களைப் பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் அவரைப் பார்த்தீர்களா? அதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?

இல்லை. நான் அவரைப் பார்க்கவில்லை. என்னிடம் ஆதாரம் இல்லை.

* நீங்கள் செய்த எதற்குமே ஆதாரம் இல்லை என்றால், கைரேகையை பதிவு செய்தது மட்டும் எப்படி சரியாக நடந்திருக்க முடியும்?

என்னிடம் ஆதாரம் இல்லை. அவ்வளவுதான்.

* கைரேகை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆம் தெரியும். எனக்கு ரேகைகள் விஷயத்தில் அனுபவம் உள்ளது.

* உயிரோடு இருப்பவர் வைக்கும் கைரேகையில் ரேகைகளின் ஓட்டத்தை எளிதாக பார்க்க முடியுமா?

ஆம். எளிதாக பார்க்கலாம்.

* ஆனால் ஜெயலலிதா வேட்புமனு படிவங்களில் வைத்த கைரேகையில் இட்ஜஸ் எனப்படும் ரேகை ஓட்டம் தெளிவாக தெரியவில்லையே?

அதுபற்றி எனக்கு தெரியவில்லை.

* ஜெயலலிதாவின் பெயரால் பெறப்பட்ட ரேகையில் ரேகைகள் இல்லாமல் வெறும் புள்ளி புள்ளியாய் இருப்பதால் அது உண்மையில் ஜெயலலிதா இறந்த பிறகு எடுக்கப்பட்டது. நீங்கள் கைரேகை பெற்ற 27-10-2016க்கு முன்பே அவர் இறந்துவிட்டார். அவர் இறந்து சில நாள்கள் கழித்துதான் இந்த ரேகை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

* ஜெயலலிதா கைரேகை பதியப்பட்ட வேட்புமனுக்களை உங்களிடம் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் பெற்றாரா?

இல்லை. நான் அவரிடம் கொடுக்கவில்லை.

- இவ்வாறு சுமார் நூறு கேள்விகள் டாக்டர் பாலாஜியிடம் கேட்கப்பட்டதில் பல கேள்விகளுக்கு மனுதாரரான திமுக வேட்பாளர் சரவணனுக்கு சாதகமான பதிலையே கூறினார் டாக்டர் பாலாஜி. இந்த குறுக்கு விசாரணை முடிவதற்குள் மாலை ஐந்து மணியை நெருங்கிவிட்டது.

அப்போது நீதிபதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் தரப்பு வழக்கறிஞரிடம், ‘நீங்களும் இன்றைக்கே டாக்டர் பாலாஜியிடம் குறுக்கு விசாரணையை முடித்துவிட வேண்டும். இதற்காக இன்னொரு நாள் தர முடியாது’என்று கூறினார்.

அப்போது நீதிமன்றத்துக்குள் பத்திரிகையாளர்கள் திரளாக வந்துவிட்டனர். இதையடுத்து, எதிர்தரப்பான ஏ.கே.போஸ் தரப்பில், ‘பத்திரிகையாளர்கள் வந்துவிட்டார்கள். இவர்கள் அனைத்தையும் எழுதிவிடுவார்கள்’ என்று அவர்கள் நீதிமன்றத்துக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி வேல்முருகன், ‘பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக நாம் வழக்கு நடத்தவில்லை. அதேநேரம் பத்திரிகையாளர்கள் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள். அவர்கள் நீதிமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி வரிக்கு வரி எழுதாமல், வழக்கு இந்த மாதிரி நடந்தது என்ற தார்மீகப் பொறுப்புடன் செய்தியை வெளியிட வேண்டும்’ என்றார்.

அதற்குள் நேரம் ஆகிவிட்டதால், ‘டாக்டர் பாலாஜியை எதிர் மனுதாரரான ஏ.கே.போஸ் தரப்பில் நவம்பர் 3ஆம் தேதி குறுக்கு விசாரணை செய்யலாம்’ என்று கூறி வழக்கை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

இது வெறும் தேர்தல் வெற்றி தோல்விக்கான வழக்கு மட்டுமல்ல. அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வேட்புமனுவில் இருக்கும் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையுடைய பின்னணி பற்றியும் இந்த வழக்கு விரிவாகப் பேசுகிறது. எனவே, ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை உடைக்கும் கருவிகளில் ஒன்றாக இந்த வழக்கும் இருக்கிறது.

நேற்று டாக்டர் பாலாஜியிடம் நடத்திய குறுக்கு விசாரணையில் அவர் ஜெயலலிதாவிடம் கைரேகை பதிவு செய்ததில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதை அவரே உறுதி செய்திருக்கிறார். இது இந்த விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.

அடுத்தடுத்து இந்த வழக்கு சூடு பறக்கும். ஜெ. மரணத்தின் மர்மக்கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கும்!

Post a Comment

0Comments

Post a Comment (0)